விபத்தில் சிக்கிய கார் - கஜா புயல் நிவாரணக் கூட்டத்துக்குச் சென்ற அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சோகம் | Car accident near sivagangai

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (24/12/2018)

கடைசி தொடர்பு:08:26 (24/12/2018)

விபத்தில் சிக்கிய கார் - கஜா புயல் நிவாரணக் கூட்டத்துக்குச் சென்ற அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சோகம்

கஜா புயல் நிவாரணத்துக்கான கூட்டத்துக்குச் சென்ற அதிகாரிகள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அதிகாரிகள் மட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டியில் நேற்று (23-12-2018) கஜா புயல் நிவாரணம் குறித்த வருவாய்த்துறை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இக்கூட்டத்தின் ஆய்வுப் பணிக்கு சென்னை ஆணையர் கலந்துகொள்ள இருந்ததையடுத்து மாவட்ட அதிகாரிகள் புழுதிபட்டி நோக்கி அதிகாலை முதல் விரைந்து கொண்டிருந்தனர். சிவகங்கையிலிருந்து மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ரமேஷ், திருக்கோஷ்டியூர் சுகாதார ஆய்வாளர் மோகன் முத்துரெத்தினம், ஒட்டுநர் நாராயணதாஸ் ஆகியோர் அரசு ஜீப்பில் திருப்பத்தூர் அடுத்து காரையூர் அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம் எதிர்பாரதவிதமாக ஜீப்பில் மோதியதில் சுகாதார ஆய்வாளர் மோகன்முத்துரெத்தினம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கஜா நிவாரண் கூட்டத்துக்கு சென்ற போது விபத்து

ஜீப் ஓட்டுநர் நாராயணதாஸ் மற்றும் மாவட்ட அதிகாரி ரமேஷ் ஆகியோர் பலத்த காயத்துடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சிவகங்கை அரசு மருத்துவமனை கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து சரக்கு வாகன ஒட்டுநர் சலாம் என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க