வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (24/12/2018)

கடைசி தொடர்பு:08:40 (24/12/2018)

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் - மழையிலும் குவிந்த பக்தர்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் வெகு சிறப்பாக நடைபெறும். 

சிதம்பரத்தில்

இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் வைக்கப்பட்டு மேள வாத்தியங்கள் முழங்கிட தேர்த் திருவிழா தொடங்கியது. அப்பொழுது மழை பெய்யத் தொடங்கியது. கொட்டும் மழையில் பக்தர்கள் வடம் பிடித்து சிவ கோஷங்கள் முழங்கிட தேர் இழுத்தனர். சிவ பக்தர்கள் வாத்தியக் கருவிகள் முழங்கிட சிவ நடனம் ஆடியபடி வந்தனர். கன மழை காரணமாக தேர் புறப்பட்ட 3 மணி நேரத்திலேயே நிலைக்கு வந்தது. அதன்பின்பு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி வைக்கப்பட்டு நேற்று  அதிகாலை மகா அபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து சிவகாமசுந்தரி அம்பாள் சமேத  நடராஜர் சுவாமிகளும் திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்கள். மதியம் 3 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்ச மூர்த்திகள் வீதி முடிந்து தீர்த்தவாரி நடந்தது. மதியம் 4 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

சிதம்பரத்தில்

அப்போது  ஆயிரம்கால் மண்டபத்திலிருந்து சிவகாமசுந்தரி அம்பாள்  சமேத நடராஜர் மூர்த்தி சுவாமிகள் முன்னுக்கும், பின்னுக்கும்  ஆடியபடியே பக்தர்களுக்கு  காட்சி அளித்தனர்.  அப்பொழுது சாரல் மழை பெய்தது, மழையை பொருட்படுத்தாது   ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர்.  இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்