வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (24/12/2018)

கடைசி தொடர்பு:08:48 (24/12/2018)

‘இந்திரா காந்தியின் உள்நோக்கமே கச்சத்தீவு கைமாறியதுக்கு காரணம்!’ - பண்ருட்டி ராமச்சந்திரன்

‘இந்திராகாந்தியின் அரசியல் உள்நோக்கத்தால்தான் கச்சத்தீவை இழந்தோம். இதில் பெரிய வரலாறில்லை’ என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

பண்ருட்டி ராமச்சந்திரன்

வேலூரில், வி.ஐ.டி பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான விசுவநாதனின் 80-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் மற்றும் அமைச்சர் கே.சி.வீரமணி, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரின் மகன், மாநிலங்களவை எம்.பி., டி.ராஜா, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு வேந்தர் விசுவநாதனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், ``தமிழர்களுடைய நோக்கம் உலக பொதுநோக்கு. உலகுக்கே வாழ்க்கை நெறியை வகுத்துத் தந்த வள்ளுவர் எங்கேயாவது தமிழ், தமிழன், தமிழ்நாடு பற்றி பேசியிருக்கிறாரா? மனிதகுலம் அனைத்துக்கும் ஒரே நீதியை வழங்கிய பெருமை திருவள்ளுவர் ஒருவருக்கு மட்டுமே உண்டு. அப்படி, உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகத்தை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் வள்ளுவரின் தமிழ் மரபில் வந்த வேந்தர் விசுவநாதன். 


``கச்சத்தீவில் மனிதர்களே இல்லை. அதனால் தான் தந்தேன் என்கிறீர்களே... அதேபோல் அந்தமான் தீவிலும் மனிதர்கள் இல்லை. அதை இந்தோனேசியாவுக்குத் தந்துவிடுவீர்களா?" என்று பாராளுமன்றத்தில் அப்போதே கேள்வி எழுப்பியவர் விசுவநாதன். கச்சத்தீவு தாரை வார்ப்பில் பெரிய வரலாறு ஒன்றுமில்லை. கச்சத்தீவைக் கொடுங்கள். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் எளிதில் வெற்றிபெற்று விடுவேன் என்று சிறீமாவோ பண்டார நாயகா (இலங்கையின் முன்னாள் பெண் பிரதமர்), இந்திராகாந்தியிடம் கேட்டுக்கொண்டார். சிறீமாவோ வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்பட்ட இந்திராகாந்தி, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துவிட்டார்’’ என்றார்.


பொன்னையன் பேசுகையில், ‘‘வேந்தர் விசுவநாதன் தமிழ்ப்பற்று கொண்டவர். ஈழப்போரின்போது சிங்கள ராணுவத்தால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். காங்கிரஸ், தி.மு.க கூட்டாட்சி நவீன ராணுவ தளவாடங்கள் மற்றும் விஷவாயு குண்டுகளைக் கொடுத்து உதவினர். இப்படிப்பட்ட சூழலில், ஈழத்தமிழர்களின் நலன் காக்கவும், தொழில்நுட்ப விஞ்ஞானத்தைத் தமிழர்கள் பெற வேண்டும் என்பதற்காகவும் வேந்தர் விசுவநாதன் உழைக்கிறார்’’ என்றார்.