கலெக்டருக்கு எதிராகக் கடிதம்.. கோமாவில் இருக்கும் அம்மாவுக்காக நீதிமன்ற படியேறி வென்ற ஆதர்ஷா | Nagercoil college student aadharsha's success

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (24/12/2018)

கடைசி தொடர்பு:11:24 (25/12/2018)

கலெக்டருக்கு எதிராகக் கடிதம்.. கோமாவில் இருக்கும் அம்மாவுக்காக நீதிமன்ற படியேறி வென்ற ஆதர்ஷா

கலெக்டருக்கு எதிராகக் கடிதம்.. கோமாவில் இருக்கும் அம்மாவுக்காக நீதிமன்ற படியேறி வென்ற ஆதர்ஷா

18 வருடங்கள் கோமாவில் இருக்கும் தாய்க்காக நீதிமன்றப் படியேறி வெற்றி பெற்றுள்ளார் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆதர்ஷா. இவரைப் பற்றி விகடன் தளத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ``அம்மாவுக்கு நான் எப்படி இருப்பேன்னுகூட தெரியாது'' - 18 வருடமாக கோமாவில் அம்மா... தவிக்கும் மகள்  என்றத் தலைப்பில் கட்டுரை வெளியாகி இருந்தது. 

atharsha

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் இடைக்காட்டன்காலையைச் சேர்ந்த ஷோபாவுக்கும், குலசேகரம் செருப்பாலூரைச் சேர்ந்த ராஜேஷ்பாபுவுக்கும் 1998 டிசம்பரில் திருமணம் நடந்தது. 3.3.2000 அன்று குலசேகரம் மருத்துவமனையில் சிசேரியன் மூலம், பெண் குழந்தையைப் பெற்றார் ஷோபா. போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் கோமா நிலைக்குச் சென்றார் ஷோபா. அங்கே இங்கே அலைந்து போராடியும் பயன் இல்லை. ஷோபாவின் தாய் வனஜாதான் இப்போதுவரை கவனித்து வருகிறார். அம்மாவின் அரவணைப்பு இல்லாமலேயே வளர்ந்து கல்லூரிக்கு சென்று வருகிறார் மகள் ஆதர்ஷா. ஷோபா நிலை குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். ஆனால், 18 வருடங்களாக அந்த வழக்குக்குத் தீர்வு கிடைத்தபாடில்லை.  

shobha

இந்த நிலையில் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு தன் நிலை குறித்து கடிதம் ஒன்றை எழுதினார் ஷோபாவின் மகள் ஆதர்ஷா. . கடிதத்தைப் படித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.சதீஷ், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆதர்ஷாவுக்கு மாதம் ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

atharsha

ஆனால், நாகர்கோவில் மாவட்ட ஆட்சித்தலைவர் நிவாரணத் தொகை வழங்கவில்லை. இந்த நிலையில், ஆதர்ஷா கடந்த வாரம் மதுரை உயர்நீதிமன்றம் நீதிபதிக்கு இதுகுறித்து கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் ஆட்சித்தலைவர் நிவாரணம் வழங்காதது குறித்தும், நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பு தாமதம் ஆவது குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, நீதிமன்றம் தானாக முன்வந்து குமரி மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்தது. இந்த வழக்கைக் கடந்த 18-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

vanaja

நீதிமன்றம் தாமாக வந்து ஆட்சித்தலைவர் மீது வழக்கு தொடர்ந்ததை அடுத்து, ஆதர்ஷா கல்லூரிக்கு வந்த அதிகாரிகள் அவரை கையோடு ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று கடந்த 5 மாதங்களுக்கான செலவு காசோலை 25000-ஐ கொடுத்திருக்கிறார்கள்.