வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (24/12/2018)

கடைசி தொடர்பு:18:40 (24/12/2018)

`மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை!’ - சுகாதாரச் செயலாளர்

தமிழகத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான் என்றும் அதைப் போக்கும் வகையில், பட்டப்படிப்புக்கு கூடுதல் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய பல்நோக்கு சிறப்பு  மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 100 சதவிகிதம் முடிவடைந்துள்ள நிலையில்,  இந்த மருத்துவமனையை இன்று தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான படுக்கை அறை, ஸ்கேன் மையம், எக்ஸ்ரே மையம், அறுவை சிகிச்சைக்கான அரங்கு ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டு நோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,  ``பாளையங்கோட்டையில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கட்டுமானப்பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், மருத்துவக்கருவிகளைப் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 80 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் திறக்கப்படும்.

இந்தப் பல்நோக்கு மருத்துவமனைக்காக மருத்துவர்கள், செவிலியர்கள் என 450 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் மருத்துவப் பணியிடங்களில் புதியவர்களை நியமிக்க ஆண்டுதோறும் 33 கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், மருத்துவத் துறையினர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் காரணமாக இந்தப் பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது கட்டுக்குள் உள்ளது. இருந்தபோதிலும், உள்ளாட்சி நிர்வாகத்தினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு நோய்த் தாக்குதலைக் கட்டுக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள 9 மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அரசு சார்பாக 165 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மண்டல புற்றுநோய் மையத்தில் நவீன சிகிச்சை முறை அடுத்த 3 மாதங்களில் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புற்று நோய்க்காக தற்போது பொதுமக்கள் சென்னை சென்று சிகிச்சை பெற வேண்டிய அவசியம் உள்ளது. இனி அத்தகைய நிலை ஏற்படாது. நெல்லையிலேயே தரமான சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம். 

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். ஆண்டுதோறும் மருத்துவ உயர் கல்வி பயில்வதற்கு 1000 மருத்துவர்கள் சென்றுவிடுவதால்  இந்த நிலை ஏற்படுகிறது. இதை சரிப்படுத்தும் வகையில், 1834 புதிய மருத்துவர்கள் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர். அதற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. அத்துடன், தமிழகத்தில் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மருத்துவ இளநிலை பட்டப் படிப்புக்கு 350 இடங்கள் உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, 

நெல்லை, மதுரை, மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மருத்துவ படிப்புக்கான இடங்களும், கரூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரியில் புதிதாக 150 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக அகில இந்திய மருத்துவக்கவுன்சிலிடம்  விண்ணப்பித்துள்ளோம். முதுநிலை படிப்பில் இந்த ஆண்டு கூடுதலாக 44 இடங்கள் கிடைத்துள்ளன. 

நெல்லை அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் உள்ள மாணவர் விடுதி,  உள்கட்டமைப்பு வசதிகள் விரைவில் மேம்படுத்தப்படும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து மருத்துவக்கழிவுகள் கொண்டு வரப்பட்டு தமிழக எல்லைக்குள் கொட்டப்பட்டு வருகின்றன. அதனால் நோய் பரவும் ஆபத்து ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன

அதைத் தடுக்கும் வகையில் கேரள முதல்வரிடம் புகார் அளித்துள்ளோம். மேலும், தமிழகப் பகுதிகளில் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.  

இந்த ஆய்வுப் பணியின்போது மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் கண்ணன் மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள் உடன் இருந்தனர்.