வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (24/12/2018)

கடைசி தொடர்பு:15:44 (24/12/2018)

``கொள்கைக் கூட்டணியா அல்லது கொள்ளைக் கூட்டணியா?’’ - மோடியைச் சாடும் ஸ்டாலின்

தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத் தொகுதி கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

திமுக கூட்டம்

இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, ‘கஜா புயலால் உயிரிழந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலிசெலுத்தினர். பின்னர், ‘கஜா பேரிடர் நிதியை மத்திய அரசு விரைவில் வழங்க வேண்டும் எனவும், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயிகளின் கடன், மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், அவர்களுக்கான நிவாரண உதவிகளை விரைவில் வழங்க அ.தி.மு.க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

திமுக கூட்டம்

எந்தக் காரணம் கொண்டும் எவ்வித அழுத்தத்துக்கும் அடிபணிந்து, மேக்கே தாட்டூ அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதித்துவிடக் கூடாது என்றும், காவிரியில் தமிழக உரிமையைப் பாதுகாத்திடும் நோக்கில் இப்போது கொடுத்திருக்கும் அனுமதியை ரத்துசெய்ய வேண்டும் என்றும்  உரிய அரசியல் அழுத்தத்தை மத்திய பா.ஜ.க அரசுக்கு அளிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

திமுக கூட்டம்

கூட்டம் முடிந்த பின்னர், அறிவாலயத்துக்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “தி.மு.க கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கஜா புயல் சம்பந்தமாக ஒரு தீர்மானமும் மேக்கே தாட்டூ அணை தொடர்பாக ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி வாரியாக பூத் கமிட்டி அமைக்கப்பட்டு அவை முறையாக அமைக்கப்பட்டிருக்கிறதா என 12 பேர் அடங்கிய எம்.எல்.ஏ-க்கள் குழு மூலம் ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது. அது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. 

ஸ்டாலின்

அதேபோல, விரைவில் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் பணிகுறித்தும் இன்று விவாதிக்கப்பட்டது. மேலும், ‘மக்களிடம் செல்வோம்; மக்களிடம் சொல்வோம்; மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற முழக்கத்துடன், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் ஜனவரி   3-ம் தேதி முதல் ஊராட்சிமன்றக் கூட்டம் கூட்ட உள்ளோம்.

பிரதமர் மோடி, அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. அது கொள்கைக் கூட்டணியா அல்லது கொள்ளைக் கூட்டணியா? முன்னதாக ஓ.பி.எஸ்-ஸையும் ஈ.பி.எஸ்-ஸையும் சேர்த்து வைத்தவர் மோடி. ராகுலை பிரதமராக நான் முன் மொழிந்தது தி.மு.க-வின் உணர்வு. அதைத்தான் நான் வெளிப்படுத்தினேன். நான் கூறியதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சற்று பொறுத்திருந்து அறிவித்திருக்கலாம் என்ற கருத்துதான் பேசப்படுகிறது. விரைவில் அவர்களும் தி.மு.க-வின் கருத்தை முன் மொழிவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தற்போது, எமர்ஜென்சியைவிட ஒரு சர்வாதிகார ஆட்சியை மோடி நடத்திக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.