சென்னையில் திருவையாறு! - முதல் தடவை மோகினியாட்டம் ஆடியவரின் நெகிழ்ச்சி பின்னணி | Dancer Rekha background, who does Mohiniyattam at chennaiyil Thiruvaiyaru

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (24/12/2018)

கடைசி தொடர்பு:16:20 (24/12/2018)

சென்னையில் திருவையாறு! - முதல் தடவை மோகினியாட்டம் ஆடியவரின் நெகிழ்ச்சி பின்னணி

சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில், முதல் முறையாக மோகினி ஆட்டம் சேர்க்கப்பட்டிருக்கிறது. மோகினியாக நடனமாடியவர், மோகினியாட்டத்திலும் பரதத்திலும் முனைவர் பட்டம் பெற்ற ரேகா ராஜு.  சில நாள்களுக்கு முன், காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தன்னுடைய கால்களில் 2000-மாவது தடவையாக சலங்கை கட்டியிருக்கிறார். யெஸ், இதுவரை 2000 தடவை மேடையில் மோகினியாக அவதரித்துள்ள ரேகாவின் இன்னொரு முகம், கேட்பவர்களை நெகிழ்ச்சியுறச்செய்துவிடும். 

திருவையாறு

''நாட்டியம் சொல்லித் தருவதை பொருளாதாரம், கலை வளர்ச்சி தாண்டி, அது தன்னைக் கற்றுக்கொள்பவர்களுக்கு சந்தோஷத்தைத் தர வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்'' என்கிற ரேகா, கட்டணமே வாங்கிக்கொள்ளாமல் ஏழைக் குழந்தைகளுக்கும், ஹெச்.ஐ.வி பாதிப்புள்ள குழந்தைகளுக்கும் பரதமும் மோகினியாட்டமும் கற்றுத் தருகிறார். 

''ஹெச்.ஐ.வி பாதிப்புள்ள குழந்தைகளை நான் தனித்து அடையாளப்படுத்துவதும் இல்லை. என்னிடம் நடனம் கற்க வரும் மற்ற பிள்ளைகள் போலத்தான் அவர்களும் என் டான்ஸ் கிளாஸில் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். அந்தக் குழந்தைகளின் கடைசி நாள்களை சந்தோஷமாக வைத்துக்கொள்வது என் கடமை'' என்கிற ரேகா, இதுவரை 35-க்கும் மேற்பட்ட ஹெச். ஐ. வி பாதிப்புள்ள குழந்தைகளுக்கு நடனம் கற்றுத் தந்திருக்கிறார். 

மாணவிகளுடன் ரேகா

சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் ரேகாவின்  மோகினியாட்டத்தைக் கண்டு ரசிக்க, திருநின்றவூரில் உள்ள கசுவா கிராமத்தில் அமைந்துள்ள 'சேவாலயா' தொண்டு நிறுவனம் நடத்தும் பள்ளியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் வந்திருந்தார்கள். நிகழ்ச்சியின் முடிவில் ரேகாவிடம், அவருடைய நடனம் பற்றியும், அவருடைய ஊர், படிப்பு, இதுவரை எத்தனை மேடைகளில் ஆடியிருக்கிறார், எந்தெந்த ஊர்களுக்குச் சென்றிருக்கிறார், ரேகாவின் சிறுவயது அனுபவங்கள் என பல விஷயங்களைப் பற்றியும் அளவலாவிச் சென்றிருக்கிறார்கள்.