காட்டுக்குள் தாலுகா அலுவலகமா? - கடையநல்லூரில் வெடித்த போராட்டம்; 800 பேர் கைது! | people agitated to stop taluk office construction in a remote place in Kadayanallur

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (24/12/2018)

கடைசி தொடர்பு:16:00 (24/12/2018)

காட்டுக்குள் தாலுகா அலுவலகமா? - கடையநல்லூரில் வெடித்த போராட்டம்; 800 பேர் கைது!

கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை ஆள் அரவமற்ற காட்டுப் பகுதியில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 800 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடையநல்லூர் பகுதியைத் தனித் தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. இது தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத் உட்பட பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக கடையநல்லூர் தனித் தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. அதற்கான அலுவலகம் மெயின்ரோட்டில் வேளாண்மைத்துறைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில், தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டபோது, அரசியல்வாதிகள் சிலருக்கு ரியல் எஸ்டேட் தொழிலுக்குப் பயன்படும் வகையில் நகரின் ஒதுக்குப்புறமான இடத்தைத் தேர்வு செய்ய முடிவு செய்தனர். ஆனால், காட்டுப் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் தாலுகா அலுவலகம் அமைக்க பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

தற்போது அரசியல் அழுத்தம் காரணமாக மீண்டும் புதிய அலுவலகத்தைக் காட்டுப் பகுதியில் கட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, திடீரென இரவு 7 மணிக்கு கட்டுமானத்துக்கான பணிகளைத் தொடங்கினார். அதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். 30 வருவாய் கிராம மக்கள், 3  பேரூராட்சி, 2 நகராட்சி, 25 கிராம ஊராட்சி  மக்கள் சிரமமின்றி வந்து செல்ல போதுமான பேருந்து வசதி, சாலைவசதி இல்லாத வனவிலங்குகள் நடமாடும் இடத்தில் சமூக வன காட்டை கரட்டுப்புறம்போக்கு எனத் திட்டமிட்டு திருத்தி புதிய அலுவலகம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் பொதுமக்களின் நலன் கருதி தற்போது அடிக்கல் நாட்டியுள்ள இடத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் நகரின் மையப் பகுதியான போக்குவரத்துக்கு வசதியான இடத்தில் புதிய அலுவலகத்தைக் கட்ட தமிழக அரசை வலியுறுத்தியும் தாலுகா அலுவலகத்தை முற்றுகையி்ட்டுச் சிறைசெல்லும் போராட்டம் இன்று நடைபெற்றது.

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமான பொதுமக்கள், புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய இடத்தை முற்றுகையிட ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்று முற்றுகையிட முயன்றனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை புளியங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

அதன்படி, முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற 300 பெண்கள் உட்பட 800 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அனைவரும்  தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில், தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் நெல்லை முகம்மது பைசல், மாவட்டத் தலைவர் ஜலாலுத்தீன் செயலாளர் சுலைமான் பொருளாளர் செய்யது மசூது மற்றும் குறிச்சி சுலைமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.