`ஸ்டெர்லைட்டை அப்புறப்படுத்து; தூத்துக்குடியைத் துப்புரவுபடுத்து’ - ஓங்கி ஒலித்த குழந்தைகள் குரல் | childrens gave petition to pass special resolution in tamilnadu asssembly against sterlite

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (24/12/2018)

கடைசி தொடர்பு:17:18 (24/12/2018)

`ஸ்டெர்லைட்டை அப்புறப்படுத்து; தூத்துக்குடியைத் துப்புரவுபடுத்து’ - ஓங்கி ஒலித்த குழந்தைகள் குரல்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் இயற்றிட வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பினர் தங்கள் குழந்தைகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி நடைபெற்ற மக்களின் தொடர் போராட்டத்தால் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவித்து தமிழக அரசு, கடந்த மே 28-ம் தேதி அரசாணை வெளியிட்டு ஆலையை சீல் வைத்து மூடியது. தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஆலையை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

``ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறானது” என அந்தக் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. இந்நிலையில், சில நிபந்தனைகள் விதித்து  ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தீர்ப்பளித்தது தீர்ப்பாயம். தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. முதலமைச்சர் முதல் அமைச்சர்கள், ஆட்சியர் வரை “ஆலை திறக்கப்பட வாய்ப்பில்லை” எனச் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றனர்.

ஸ்டெரலைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தொடர் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பினர் தங்கள் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

மனு அளிக்க வந்த குழந்தைகள் பேசுகையில், “தூத்துக்குடியில் உள்ள நாசக்கார ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் புகையால் வளிமண்டலம் மாசுபாடு அடைகிறது. இந்த ஆலையின் கழிவுகள் நிலத்தில் கலப்பதால் மண் மலடாகிவிடுகிறது. நிலத்தடி நீரும் நிறம் மாறி நச்சுகள் கலந்த நீராக மாறிவிடுகிறது. ஆலை வெளியிடும் புகையால் மூச்சு விடுவதில் சிரமம், தொண்டைப் பிரச்னை, கண் எரிச்சல் முதல் புற்றுநோய் வரை பல வகையான நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வருங்கால சந்ததிகளாகிய நாங்கள் பாதுகாப்பாகவும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமென்றால் இந்த ஆலை தூத்துக்குடியிலிருந்து அகற்றப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமென்றால் ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்பட வேண்டும். அதற்கு தமிழக அரசு மக்கள் கூறுவதுபோல, சட்டமன்றத்தில் ஆலையை மூடுவதற்கு தகுந்தபடி, சிறப்புச் சட்டம் இயற்றிட வேண்டும். குழந்தைகள் பிரார்த்தனை பலிக்கும் என்பார்கள். அதே போல குழந்தைகளின் போராட்டத்துக்கும் தீர்வு கிடைக்க வேண்டும்” என்றனர். ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆலைக்கு எதிராகக் கோஷங்க எழுப்பினர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க