வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (24/12/2018)

கடைசி தொடர்பு:17:40 (24/12/2018)

`நிர்மலா சீதாராமன் தமிழகத்துக்கு எதிராகச் செயல்படுகிறார்’ - குற்றம்சாட்டும் அன்புமணி

அன்புமணி

`மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்துக்கு எதிராகச் செயல்படுகிறார்' என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். 

அன்புமணி


சேலம் சிவராஜ் ஹாலிடே ஹோட்டலில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். இந்தச் சந்திப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அருள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இந்தச் சந்திப்பில் பேசிய அன்புமணி, ``பாட்டாளி மக்கள் கட்சி அந்தக் கட்சியோடு கூட்டணி சேர்ந்து இவ்வளவு சீட் வாங்கிவிட்டார்கள். என்றெல்லாம் உண்மைக்கு மாறாகச் சில ஊடகங்கள் எழுதி கூட்டணி குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். நாங்கள் இன்னும் யாரிடமும் கூட்டணி பற்றிப் பேசவில்லை. தேர்தல் அறிவித்த பிறகு எங்களுடைய நிலைப்பாட்டை அறிவிப்போம். ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும். தீய சக்திகளை ஒழிக்க வேண்டும். மதுவை அழிக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்ற வேண்டும்.

சேலம் டு சென்னை 8 வழிச்சாலை தேவையற்ற திட்டம். நாங்கள் உயர் நீதிமன்றம் சென்று வழக்கு போட்டிருக்கிறோம். அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த மாதம் தீர்ப்பு வரலாம். சேலம் 8 வழிச்சாலை தேவையற்றது. இந்த நிதியை வேறு பணிக்கு செலவு செய்யலாம். சேலம் டு கன்னியாகுமரி வரை புதியதாக 8 வழிச்சாலை போடலாம்.  

சேலத்தில் ஏற்கெனவே 3 தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கிறது. அதனால் நான்காவதாக ஒரு சாலை தேவையில்லை. சேலம் டு வாணியம்பாடி வரை 179ஏ சாலையை உடனடியாகப் போட வேண்டும். இந்த சாலை அமைத்தால் சேலம் டு சென்னைக்கு 4 மணி நேரத்தில் போகலாம். ஆனால், சேலம் டு சென்னை 8 வழிச்சாலையால் 5 மணி நேரம் ஆகும். சேலம் டு சென்னை 8 வழிச் சாலை யாருக்கும் பயன்படாது. எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே பயன்படும்.

கர்நாடகாவில் மேக்கே தாட்டூ அணை கட்ட மத்திய அரசு முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இது தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்கிற துரோகம். இது சட்டத்துக்கும், காவிரி நடுவர் மன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது. தமிழ்நாடு அனுமதி இல்லாமல் கர்நாடகாவில் எந்தத் திட்டமும் காவிரிப் படுக்கையில் செய்ய முடியாது. மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி அளித்திருக்கிறது.

அங்கு அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து அணுகுகிறார்கள். ஆனால், இங்கு முதல்வர் இன்னும் அனைத்துக்கட்சிக் கூட்டம்கூட போடவில்லை. விரைவாக முதல்வர் அனைத்துக்கட்சிக் கூட்டம் போட்டு மேக்கே தாட்டூவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். 140 ஆண்டுக்கால போராட்டத்தில் 40 ஆண்டுக்கால சட்டப் போராட்டத்தில் இந்த வருடம் தீர்ப்பு வந்தது. மீண்டும் மத்திய அரசு தேர்தலுக்காக ஒரு புதிய பிரச்னையை உருவாக்கி இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாட்டுக்கு எதிராகச் செயல்படுகிறார்'' என்றார்.