வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (24/12/2018)

கடைசி தொடர்பு:18:24 (24/12/2018)

‘வேலை கொடுங்க... இல்லை எங்க நிலத்தைக் கொடுங்க!’ - 38 ஆண்டுகளாகப் பெல் நிறுவனத்திடம் போராடும் ஏழு பேர்

‘வேலை வழங்குவதாகக் கூறி 38 ஆண்டுகளாக ஏமாற்றுவதாக’ ராணிப்பேட்டை பெல் நிறுவனம் மீது பாதிக்கப்பட்ட ஏழு பேர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

கழிவு

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார். நாட்றம்பள்ளி, பெத்தகல்லுப்பள்ளி புத்துக்கோயில் பொரிகாரன் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் உள்ள மணி என்பவரின் விவசாயக் கிணற்றில் லாரி மூலம் தோல் கழிவுகள் கொண்டுவந்து கொட்டப்படுகிறது. நில உரிமையாளர்களின் சம்மதத்துடன் கழிவுகள் கொட்டப்பட்டாலும், சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கேத்தாண்டப்பட்டி, கூத்தாண்டகுப்பம், பெத்தகல்லுப்பள்ளி, சின்னமோட்டூர், நெக்குந்தி மற்றும் தெக்குப்பட்டு ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர் மாசடைந்து தொற்றுநோய் ஏற்படும் அபாய நிலை காணப்படுகிறது. எனவே, கிணற்றில் கொட்டியுள்ள தோல் கழிவுகளை அகற்றுவதுடன், இனிமேல் கழிவுகள் கொட்டுவதையும் தடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

பெல் நிறுவனம்

வாலாஜா தாலுகா திருவலம் சீக்கராஜபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஜனார்த்தனம், கணேசன், வெங்கடேஷ், தீபா, அன்பரசி, ருக்மணி ஆகிய ஏழு பேர் கூட்டாகக் கொடுத்த மனுவில், ‘‘1980-ல் எங்களுடைய நிலங்கள், ராணிப்பேட்டை பெல் நிறுவனத்துக்காக (மத்திய பொதுத்துறை மின்மிகு உற்பத்தி நிறுவனம்) ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இதற்காக எங்களுக்கு அந்த நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் எங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. ஏழு பேருக்கும் அந்நிறுவனம் வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் எங்களுடைய நிலத்தைத் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.