`காப்பகங்கள் இந்தப் பெண்ணை சேர்த்துக்கொள்ள மறுக்கின்றன’ - சேலம் கலெக்டரிடம் முறையிட்ட சமூக ஆர்வலர் | There is no place for mentally challenged persons in salem?

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (24/12/2018)

கடைசி தொடர்பு:19:30 (24/12/2018)

`காப்பகங்கள் இந்தப் பெண்ணை சேர்த்துக்கொள்ள மறுக்கின்றன’ - சேலம் கலெக்டரிடம் முறையிட்ட சமூக ஆர்வலர்

மனநலம்

மனநலம்


`சேலம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவற்றோர்களுக்கும் பல காப்பகங்களும் பல உதவிக் கரங்களும் இருந்தும் தெருவோரமாக ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டுச் சென்றால் பெரும்பாலான காப்பகங்களில் அடைக்கலம் கொடுக்க மறுக்கிறார்கள்' என்று சேலம் கலெக்டர் ரோகிணியின் உதவியை நாடி இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த தெய்வராஜ்.

மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற ஒரு பெண்ணை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்த தெய்வராஜிடம் பேசியபோது, ``என்னோட சொந்த ஊரு திருப்பூர். நான் முடி திருத்தும் பணியைச் செய்து வருகிறேன். சின்ன வயதிலேயே ரோட்டோரமாகச் சுற்றும் ஆதரவற்றோர்களைப் பார்த்தால் மனசு ரொம்ப வலிக்கும். அவர்களுக்கு உணவு வழங்கி முடி திருத்தம் செய்து காப்பகங்களில் கொண்டு போய் சேர்ப்பேன். பிறகு, மாதம் ஒருமுறை அந்த காப்பகத்துக்குச் சென்று என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருவேன்.

சில இளைஞர்கள் என்னோடு கைகோத்ததால் நாங்கள் திருப்பூரில் நியூ தெய்வா சிட்டி டிரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்கித் தமிழகம் முழுவதும் ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு முடி திருத்தம் செய்து புத்தாடை அணியச் செய்து காப்பகத்தில் சேர்த்து வருகிறோம். இப்படித் தமிழ்நாடு முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பகங்களில் சேர்த்திருக்கிறேன். சிலர் மனநலம் குணமாகி குடும்பத்தோடு இணைந்தும் இருக்கிறார்கள்.

தெய்வராஜ்

சேலம் மாவட்டம் கருப்பூர் ராஜம் மெட்ரிக் பள்ளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஆதரவில்லாமல் ரோட்டோரமாகச் சுற்றுக்கொண்டிருக்கிறார் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் எனக்குத் தகவல் கொடுத்தார்கள். அதையடுத்து எங்க அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் லோகநாதன், தேன்மொழி ஆகியோர் விடியற்காலையிலேயே திருப்பூரில் இருந்து கிளம்பி வந்து அந்த ஆதரவற்ற பெண்ணுக்கு உணவுகள் வாங்கிக் கொடுத்தோம்.

பிறகு, சேலத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட காப்பகங்களுக்குப் போன் செய்தும் நேரடியாக ஆட்டோவில் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டும் பல காப்பகங்களில் கேட்டபோது அந்தப் பெண்ணை சேர்த்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. அதையடுத்துதான் சேலம் கலெக்டர் சந்தித்து முறையிட்டோம். கலெக்டரின் உதவியால் சேலத்தில் உள்ள லிட்டில் காப்பகத்தில் சேர்த்திருக்கிறோம்'' என்றார்.