வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (24/12/2018)

கடைசி தொடர்பு:19:45 (24/12/2018)

4 குழந்தைகள்... கண் தெரியாத தாய்... - கணவனால் கைவிடப்பட்ட நோயாளிப் பெண்ணுக்குக் கிடைத்த மனிதநேய உதவி

நெல்லை மாவட்டத்தில் நான்கு குழந்தைகளுடன் கணவனால் கைவிடப்பட்ட நோயாளிப் பெண்ணின் குடும்பம் வறுமையில் வாடுவதுடன் உணவின்றி தவிப்பதை அறிந்து மனித நேயத்துடன் சிலர் உதவிகள் செய்துள்ளனர்.

குழந்தைகள் உடன் அன்னபாக்கியம்

நெல்லை மாவட்டம் பணகுடி, பாஸ்கராபுரத்தில் வசித்து வருபவர், அன்னபாக்கியம். இவருக்கு ஜெயராணி என்ற 9 வயது மூத்த குழந்தையும் கேசவன், ஆதி என இரு ஆண் குழந்தைகளும் கடைசியாக 4 வயதில் பொன் ரிஷிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கடைசிக் குழந்தையான பொன் ரிஷிகா பிறந்த சில தினங்களிலேயே அன்னபாக்கியத்தின் கணவர், அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் இதுவரையிலும் அவர் மனைவியையோ அல்லது குழந்தைகளையோ பார்க்க வரவில்லை.

நான்கு குழந்தைகள் மற்றும் கண் தெரியாத தாயார் பத்திரகாளி ஆகியோரைத் தனி மனுஷியாக அன்னபாக்கியம் பராமரித்து வருகிறார். பணகுடியில் வாடகை வீட்டில் வசித்து வரும் அவர், கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் கவனித்து வருகிறார். கடைசிக் குழந்தை பொன் ரிஷிகாவுக்கு 4 வயதே உள்ளதால் அந்தச் சிறுமியையும் சகோதரர்களையும் மூத்த மகள் ஜெயராணி கவனிக்க வேண்டியதிருப்பதால் அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. குடும்ப வறுமை காரணமாகச் சிறுவர்களும் பள்ளிக்குச் செல்லவில்லை.

குடும்பத்தைப் பராமரித்து வந்த அன்னபாக்கியத்துக்கு கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதையும் சமாளித்து அவர் கூலி வேலைக்குச் சென்றுவந்த நிலையில், கடந்த 10 நாள்களாக நோயின் தீவிரத்தால் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் பார்வையற்ற தாயார் பார்வதி மற்றும் குழந்தைகளைக் கவனிக்க முடியாமல் திணறியுள்ளார். கடந்த 4 நாள்களாக ஒட்டுமொத்த குடும்பமும் உணவின்றி தவித்து வந்துள்ளனர்.

செய்தியாளர்கள்

அன்னபாக்கியம் குடும்பத்துக்குச் சொந்த வீடு இல்லாத நிலையில், அவர்களுக்கு ரேஷன் கார்டு இல்லாததால் அரசின் இலவச அரிசியும் கிடைக்காத நிலை இருந்துள்ளது. இந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட சோகம் குறித்த தகவல் ராதாபுரம், நாங்குநேரி பத்திரிகையாளர்களுக்குத் தெரியவந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த செய்தியாளர்கள் அன்னபாக்கியம் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களின் உடனடித் தேவைக்காக அரிசி மற்றும் உணவுப் பொருள்களை வழங்கியதுடன் ரூ.5,000 உதவித் தொகையாக வழங்கி அன்னபாக்கியத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்கள் மூலமாக இது பற்றிய விவரம் ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஐ.எஸ்.இன்பதுரைக்குச் சென்றது. அதைக் கேட்டதும் மிகுந்த சோகம் அடைந்த அவர், உடனடியாகப் பணகுடி சென்று அன்னபாக்கியம் குடும்பத்தினரைச் சந்தித்து உதவிகளைச் செய்துள்ளார். அத்துடன், அந்தக் குடும்பத்துக்கு உடனடியாகக் குடும்ப அட்டை வழங்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். அன்னபாக்கியம் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆதார் அட்டை எடுக்க ஏற்பாடு செய்ததுடன், அன்னபாக்கியத்துக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார். 

எம்.எல்.ஏ ஐ.எஸ் இன்பதுரை

அன்னபாக்கியத்தின் 4 குழந்தைகளையும் தனது சொந்தச் செலவில் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இன்பதுரை உறுதியளித்தார். வசிப்பதற்கான சொந்த வீடு, வாழ்வதற்கான நிரந்தர வேலை இல்லாமல் நோயாளியாகத் தவித்து வந்த குடும்பத் தலைவிக்கு உரிய சமயத்தில் கிடைத்த உதவியால், ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மனிதாபிமானம் மரித்துப் போகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், தேவையில் இருந்த குடும்பத்துக்கு உரிய நேரத்தில் உதவியவர்களைப் பணகுடி மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள்.