வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (24/12/2018)

கடைசி தொடர்பு:20:45 (24/12/2018)

`2 வருஷமா நடவடிக்கை இல்ல' - தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பதறவைத்த பெண்!

கணவருடன் சேர்த்துவைக்க வலியுறுத்தியும், தன் புகார்மீது நடவடிக்கை எடுக்காத போலீஸாரைக் கண்டித்தும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய், தங்கையுடன் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரி என்ற யமுனா. இவர், கார்த்திக் பசுபதி என்பவரை  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு, மஞ்சூர் என்ற 6 வயது மகன் உள்ளார்.  கடந்த 2 வருடங்களுக்கு முன், கார்த்திக் பசுபதி யமுனாவை விட்டுப் பிரிந்துவிட்டாராம். இந்நிலையில், தன் கணவருடன் தன்னையும், தன் மகனையும் சேர்த்து வைக்கக்கோரி, நாசரேத் காவல் நிலையம் மற்றும் திருச்செந்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்துள்ளார் யமுனா. ஆனால், தன் மனுமீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு அளிக்க தன் தாய் கிருஷ்ணம்மாள், தங்கை ஜெயமீனா, மகன் மஞ்சூர் ஆகியோருடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

தன் மகன் மஞ்சூரை ஓரமாக அமர வைத்துவிட்டு யமுனா, தன் தாய், தங்கை ஆகியோர்மீது தான் மறைத்து வைத்திருந்த 2 லிட்டர் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீப்பெட்டியால் தீயைப் பற்றவைக்க முயன்றார். இதையடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்துநிறுத்தினர். யமுனவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ”நானும் என் கணவர் கார்த்திக் பசுபதியும் சென்னையில் பாத்திரக்கடை ஒன்றில் வேலைபார்த்தோம். அப்போது, இருவரும் காதலித்தோம். தனக்கு அப்பா, அம்மா யாரும் இல்லை, தான் ஒரு அனாதை எனச்சொல்லி அவர் என்னைத்  திருமணம் செய்துகொண்டார்.

அவர் என்னை விட்டுப் பிரிந்துசென்று 2 வருஷமாச்சு. அவரைப் பற்றி விசாரித்ததில், அவருக்கு அப்பா, அம்மா இருப்பதும், தற்போது அவர் குடும்பத்துடன் சேர்ந்து வசித்துவருவதும் தெரியவந்தது. அவரை என்னுடன் சேர்த்து வைக்கக் கோரி நாசரேத் காவல் நிலையம், திருச்செந்தூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விரக்தியில் தீக்குளிக்க முயன்றேன்” என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த மே-22ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க