வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (24/12/2018)

கடைசி தொடர்பு:21:20 (24/12/2018)

`ராகுல் காந்தியை முன்மொழிந்ததில் தவறில்லை' - ஸ்டாலினுக்கு முத்தரசன் ஆதரவு!

ராகுல்காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததில் தவறில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் போசும்போது, ``பட்டாசு தொழிலாளர்களுக்கு வேலையில்லாத நாள்களில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பட்டாசு ஆலைகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலை பிரச்னைக்காக அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்து அடுத்தகட்ட போராட்டம் நடத்துவோம். கஜா புயல் நிவாரணம் வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். நிவாரணப் பணிகள் மெத்தனமாக நடைபெறுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களை எந்தக் கட்சிகளும் போராடத் தூண்டவில்லை. அரசு தப்பித்துக்கொள்வதற்காக இப்படிக் கூறுகிறது. மக்கள் தாங்களாகவே போராட்டங்களை நடத்துகின்றனர்.

முத்தரசன்

இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், பாதிக்கப்படும் மீனவர்களை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. இவர்கள் எல்லாம் இந்திய மீனவர்களா அல்லது அந்நிய நாட்டினரா? ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அரசு செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு அரசே பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் அறிவித்ததில் தவறில்லை. நாங்களும் எங்களுடைய ஆதரவை தெரிவிப்போம். ஹெச்.ராஜாவை நாங்கள் பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. அவர் நான்காம் தர அரசியல்வாதி. ஹெச்.ராஜாவை செருப்பால் அடிப்பேன் என நான் கூறினால் காவல்துறையினர் என்னைக் கைது செய்வார்கள். ஆனால், பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன அவரை இந்த அரசு என்ன செய்தது" எனத் தெரிவித்தார்.