வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (25/12/2018)

கடைசி தொடர்பு:00:00 (25/12/2018)

`ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து சமுதாயத்தையும் இணைக்க வேண்டும்' - மதுரை கலெக்டரிடம் மனு!

'மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி விழா குழுவில், அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் இணைக்க வேண்டும்' என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் உலகப்புகழ்பெற்றதாக விளங்கிவருகிறது. ஜல்லிக்கட்டு தடைபட்டதால், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரலாறு காணாத போராட்டத்தை நடத்தி வெற்றிபெற்ற பின்,  இப்போது ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவனியாபுரம் கிராம பொதுமக்கள் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனு

அதில்,"அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 100 ஆண்டுகள் பழைமையானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஜல்லிக்கட்டு விழா, கமிட்டியின் தலைமையில் நடைபெற்றுவந்தது.  ஆனால், கடந்த  இரண்டுஆண்டுகளாகத் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் போட்டி நடைபெற்றுவருகிறது. தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தில், குறிப்பிட்ட நபர்கள் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் முறைகேடுகள் செய்கின்றனர். அதனால் வீரர்களுக்கும் காளைகளுக்கும் முறையாகப் பரிசுகள் கிடைக்கவில்லை. எனவே, அவனியாபுரத்தில் உள்ள அனைத்து சங்கத்திலும் தலா  இரண்டு நபர்களை இணைத்து ஜல்லிக்கட்டு கமிட்டி அமைத்து, போட்டியை நடத்த வேண்டும்" என்று கோரி மனு அளித்தனர்.