`கல்குவாரியை மூடாவிட்டால் போராட்டத்தை முன்னேடுப்போம்' - மதுரை மக்கள் ஆவேசம்! | Shutdown the stone quarry otherwise we will protest says madurai people

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (25/12/2018)

கடைசி தொடர்பு:03:00 (25/12/2018)

`கல்குவாரியை மூடாவிட்டால் போராட்டத்தை முன்னேடுப்போம்' - மதுரை மக்கள் ஆவேசம்!

மதுரையில், 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் திறக்கப்பட்ட கல்குவாரியை மூடக்கோரி, மதுரை பாலமேடு கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

குவாரி

மதுரை மாவட்டத்தில் மேலூர் , அலங்காநல்லூர் , திருமங்கலம் , பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் குவாரிகள் அமைக்கப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாக எதிர்ப்புகள் கிளம்பியது. அதில் பல இடங்களில்  தடை விதிக்கப்பட்டது. பாலமேடு கிராமத்தில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இயங்கப்பட்டுவந்த கல்குவாரி,  மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்ததால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்தப் பகுதி கிராம மக்களுக்குத் தெரியாமல், பயன்பாட்டில் இல்லாமல்  இருந்த கல்குவாரியை ஏலம் நடத்தியதாகவும், மேலும் 10 நாள்களுக்கு மேலாக அந்த கல்குவாரியைத் திறந்து வேலைகள் செய்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பொதுமக்கள் கூறுகையில்," எங்கள் கிராமத்தில் இருக்கும் கல்குவாரியில்  கிரானைட் பாறைகள் எடுப்பதற்கு  வெடிகளைப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் குடியிருப்புகளும் , அரசுப் பள்ளிகளும் விரிசல் அடைகின்றன. இதனால் நிலங்கள் அனைத்தும் பள்ளமாகிறது. எனவே, அப்பகுதி இயற்கை வளங்களைக் காப்பாற்ற கல் குவாரி செயல்படுவதை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  முறையாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.