வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (24/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (24/12/2018)

களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - வேளாங்கண்ணியில் குவியும் மக்கள்!

Christmas

வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்றிரவு நடைபெறவுள்ள இயேசு பிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

வேளாங்கண்ணி கிறிஸ்துமஸ்

நாகை மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக, சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வந்து வழிபடும் ஆன்மிகத் தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர்  25-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி இன்றிரவு இயேசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது சிறப்புப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடைபெறும். கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, சிறப்பு திருப்பலி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர். கிறிஸ்துமஸ் விழாவுக்காகப் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. பேராலயம் மற்றும் தியான மண்டபம் ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பேராலயத்தைச் சுற்றியுள்ள மலர் செடிகளில், மின் விளக்குகள் அமைக்கப்பட்டு ஜொலிக்கின்றன. இப்பண்டிகையை முன்னிட்டு, நேற்றிரவு சிலுவைப் பாதையில் பக்தர்கள் மண்டியிட்டுச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

இதுபற்றிப் பேராலய நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, ``கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாளை காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும், காலை 8 மணிக்கு கூட்டுத் திருப்பலியும் நடைபெற இருக்கிறது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக, அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அன்னையின் ஆசிபெற வருகை தரும் பக்தர்களுக்கும், அனைத்து அடிப்படை வசதிகளும் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளன. இங்கு வரும் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்வது வழக்கம். அவ்வாறு குளிக்கும்போது ஆழமான பகுதிக்குச் செல்லாமல் இருப்பதற்காக, போலீஸார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாதுகாப்புப் பணியிலும்  ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் அமைதியாக வந்து, ஆரோக்கிய அன்னையின் அருளாசி பெற்றுச் செல்ல வேண்டுகிறோம்" என்றனர்.