`பூசாரியை இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர்' - மதுரையில் எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு! | Public complaint against police regarding Attack on the priest

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (25/12/2018)

கடைசி தொடர்பு:01:00 (25/12/2018)

`பூசாரியை இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர்' - மதுரையில் எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!

 மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். பூ வியாபாரியான இவர் விருதுநகர் மாவட்டம் கரியாபட்டி அருகே கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தில் உள்ள அழகுநாச்சி மற்றும் காளியம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். கடந்த 16-ம் தேதி அதிகாலை கோயில் உண்டியல் திருட்டு சம்பந்தமாகப் போலீஸார் இவரைக் கடுமையாகத் தாக்கியதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பூசாரியைத் தாக்கி சாதி ரீதியாக இழிவாகப் பேசிய காவல்துறை உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் ஆகியோரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

பூசாரி

இதுகுறித்து ஜெயப்பிரகாஷ் என்பவர் கூறும்போது, ``ஆனந்தராஜ் கடந்த 4 ஆண்டுகளாகக் கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தில் மார்கழி மாத பூஜைகளைக் கவனித்து வருகிறார். பூஜைக்காக வழக்கம்போல கடந்த 15-ம் தேதி இரவு தன் மாமாவுடன் கோயிலுக்குச் சென்ற அவர் இரவு பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு காளியம்மன் கோயிலில் தூங்கிவிட்டார். 16-ம் தேதி அதிகாலை அழகுநாச்சி கோயில் உண்டியல் உடைந்து கிடப்பதாக அதே கிராமத்தைச் சேர்ந்த சதுரகிரி என்பவர் தகவல் தெரிவித்தார். உடனே அவரும் அங்கே சென்று பார்த்துள்ளார். இதுசம்பந்தமாகக் கிராம பொதுமக்கள் ஆவியூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஆவியூர் காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் மற்றொரு காவலர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி ஆனந்தராஜ் மற்றும் அவரின் மாமாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். உதவி ஆய்வாளர் இரும்பு பைப் மற்றும் பிளாஸ்டிக் பைப்பால்  அவர்களைக் கடுமையாகத் தாக்கினார். விசாரணை எதுவும் செய்யாமல் நீங்களே திருடியதாக ஒப்புக்கொள்ளுங்கள் எனக் கூறி அடித்தார். மேலும் 2 காவலர்களும் அடித்தனர். சாதி ரீதியாகவும் இழிவுபடுத்தியுள்ளனர்.

எனவே, கோயில் பூசாரியைத் தாக்கிய உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் மற்றும் இரண்டு காவலர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.