வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (25/12/2018)

கடைசி தொடர்பு:02:00 (25/12/2018)

லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு எதிராக நாமக்கலில் பூட்டு போடும் போராட்டம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்துவரும் மையங்களை அப்பகுதி பொதுமக்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லாட்டரி


மது, வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. இது அனைவரும் அறிந்ததே. இதேபோல, லாட்டரியும் வீட்டுக்கு கேடுதான். இப்படியான லாட்டரி விற்பனை செய்யும் மையங்களுக்கு ராசிபுரம் பெண்கள் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். நாமக்கல் மாட்டவத்திலேயே அதிக அளவில் லாட்டரி விற்பனை நடக்கும் இடங்களாக ராசிபுரம், பேளூக்குறிச்சி, வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு, 100-க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களும், நடமாடும் விற்னை மையங்களும் செயல்படுகின்றனர். போலீஸார் அவ்வப்போது ஆக்ஷனில் இறங்கினாலும், லாட்டரியை முற்றிலும் ஒழிக்க முடியாத நிலையே உள்ளது. இனி போலீஸை நம்பி பயனில்லை என நினைத்த பொதுமக்கள், இன்று  களத்தில் இறங்கினர். இது, மிகப்பெரிய போராட்டமாக மாறியது. இதுபற்றி போராட்டத்துக்கு தலைமை வகித்த ராமு என்பவரிடம்  பேசினோம். ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கி தெருவில் ஐந்து வீடுகளை எடுத்த லாட்டரி விற்பனையாளர்கள், வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நெம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளனர். இவர்களால் இப்பகுதியில் வாகன நெரிசல் பிரச்னை, குடியிருப்புப் பகுதிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்னை இருந்துள்ளது. 

லாட்டரி


ஞாயிற்றுக்கிழமையான நேற்று, லாட்டரி சீட்டுகளை வாங்க 40-க்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கும், லாட்டரி சீட்டு வாங்க வந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவேசம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒன்றாக கூடி, லாட்டரி விற்பனை மையங்களுக்கு பூட்டு போட்டனர். பின்னர், ராசிபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில், இதே பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர், அந்தப் பூட்டை உடைத்து, அவர்களைத் திறந்துவிட்டார். உள்ளே இருந்த 40-க்கும் மேற்பட்டவர்கள், அடித்துப் பிடித்துக்கொண்டு வெளியேறினர். இதனால் கோபம் அடைந்த மக்கள், ஓடியவர்களில் சிலரைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். அரசியல் பிரமுகரை வசைபாடிய மக்கள், 'இனிமேல் இந்தப் பகுதிக்குள் வரக்கூடாது. தேர்தலில் நின்னால் உங்களுக்கு ஒரு ஓட்டுகூட கிடைக்காது' என கோஷம் எழுப்பினர். ராசிபுரத்தில் லாட்டரிக்கு எதிராகப் பெண்கள் நடத்திய இந்தப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க