வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (25/12/2018)

கடைசி தொடர்பு:10:46 (25/12/2018)

தி. மலை தெற்கு மாவட்ட செயலாளரானார் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக, இந்து சமய அறநிலையத்துறை  அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனை நியமித்து அ.தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக பெருமாள் நகர் கே.ராஜன் இருந்துவந்தார். இவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா நியமித்தார். 2016 -ம் ஆண்டு, அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி மற்றும் மா.செ.பதவி இரண்டையும் ஜெயலலிதா பறித்தார். அதன் பின், மாவட்டச் செயலாளர் பதவி பெருமாள் நகர் ராஜனுக்குக் கொடுக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர் பதவியை வகித்துவந்தார் ராஜன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு,  கட்சி நிர்வாகிகளை மதிப்பதே இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இந்த நிலையில், வடக்கு மாவட்டத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தெற்கு மாவட்டத்திற்கு வருகின்றபோது சரியான மரியாதை கொடுப்பதில்லை என்று தலைமைக் கழகத்திற்குப் புகார்கள் பறந்தன. அதற்கு உதாரணமாக, கீழ் பென்னாத்தூரில் நடந்த அ.தி.மு.க-வின் 47-வது தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் மா.செ.ராஜனுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இருவரும் சட்டையைப் பிடித்துக்கொண்டு சண்டைபோட்டனர். 

ராஜன்

அன்று முதல் அமைச்சர் ராமச்சந்திரன், அரசு நிகழ்ச்சிக்கு மட்டுமே திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு வந்துகொண்டிருந்தார். எப்படியாவது தெற்கு மாவட்ட மா.செ பதவியை வாங்கிவிட வேண்டும் என்று, முதல்வரிடமும் அமைச்சர் வேலுமணியிடமும் தொடர்ந்து முறையிட்டுவந்தார் ராமச்சந்திரன். இந்த நிலையில், நேற்று  பெருமாள் நகர் ராஜனிடமிருந்து தெற்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, அதை சேவூர் ராமச்சந்திரனிடம் ஒப்படித்துள்ளது தலைமைக் கழகம்.

வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் மாவட்டச் செயலாளராக இருந்தால், திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு ஏற்படுமே என்று தலைமைக்குழு கூறியுள்ளது. அதற்கு, நீங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை மாற்றி அமையுங்கள் என்று பேசி மாற்றிவிட்டார் அமைச்சர் ராமச்சந்திரன் என்கிறனர், விவரம் தெரிந்த அ.தி.மு.க-வினர். 

இப்போது சட்டமன்றத் தொகுதிகளும் பிரிக்கப்பட்டுள்ளன ஆரணி,  திருவண்ணாமலை, கலசப்பாக்கம், செங்கம் ஆகிய 4 தொகுதிகள் தெற்கு மாவட்டமாகவும், செய்யாறு, வந்தவாசி, போளூர், கீழ்பென்னாத்தூர் ஆகிய 4 தொகுதிகள் வடக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்      டுள்ளது. ஆற்காடு வரை இருக்கும் ஆரணி தொகுதியை தெற்கு மாவட்டமாக மாற்றியது, அரசியல் வரலாற்றில் ஏற்கக்கூடியது இல்லை என்று அ.தி.மு.க தொண்டர்கள் புலம்புகிறார்கள். அமைச்சரின் சொந்த ஊர் ஆரணி என்பதால், மாவட்டத்தையே  விதிமுறைகள் மீறி மாற்றலாமா என்று தொண்டர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக தூசி மோகனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க