செங்கல்பட்டு சிறைச்சாலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை -பணம், ஆவணங்கள் பறிமுதல் | vigilance rain in chengalpattu prison

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (25/12/2018)

கடைசி தொடர்பு:05:30 (25/12/2018)

செங்கல்பட்டு சிறைச்சாலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை -பணம், ஆவணங்கள் பறிமுதல்

செங்கல்பட்டு மாவட்ட சிறைச் சாலையில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் கணக்கில் வராத 8,000 ரூபாய் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்ட சிறை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் அமைந்துள்ளது மாவட்ட சிறைச்சாலை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த சிறைச்சாலை அகதிகள் சிறப்பு முகாமாகச் செயல்பட்டு வந்தது. இலங்கை, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குற்றப் பின்னணியுடைய அகதிகள் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இங்கிருந்த கைதிகள் வேறு முகாமிற்கு மாற்றப்பட்டுக் கடந்த சில வருடங்களுக்கு முன் மாவட்ட சிறைச் சாலையாக மாற்றப்பட்டது. இதில் நேற்று மாலை சுமார் 4.00 மணிக்கு ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி இசக்கிமுத்து தலைமையில் சுமார் 10 பேர் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர்.

அப்போது சிறை வார்டன் பெரியசாமி என்பவரிடம் இருந்து 8,000 ரூபாய் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் அடிப்படையில் அவருக்குச் சம்மன் அனுப்பப்பட உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் மாவட்ட அளவில் ஏதாவது ஒரு அலுவலகத்திற்குச் சென்று திடீர் சோதனை நடத்துவார்கள். அந்த அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைக்கு வந்ததாகத் தெரிவிக்கிறார்கள். கடந்த இரண்டு மாதத்தில் செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதுபோல் தற்போதும் சிறைச்சாலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியது சிறைத்துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க