வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (25/12/2018)

கடைசி தொடர்பு:08:35 (25/12/2018)

``இந்த மரபுகளை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்!'' -புதுச்சேரி அரசுக்கு சீமான் பாராட்டு

``புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான மதிப்பிற்குரிய  பிரபஞ்சன் அவர்களின் உடலுக்கு புதுச்சேரி அரசாங்கம் முழு அரசு மரியாதை செலுத்தியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது '' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்

மேலும், ''புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நாம் தமிழர் கட்சி பெரிதும் பாராட்டுகிறது. எழுத்துலக மேதைகளைப் பாராட்டுகிற இந்த மரபு தொடர வேண்டும். பிரதமர், முதலமைச்சர், அரசு அதிகாரங்களில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள், அரசப் பதவியில் இருந்தவர்களுக்குத்தான் அரசு மரியாதை என்கிற மரபை மீறி, இலக்கியத் துறையில் புகழ்பெற்றவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்கிற முறையை புதுச்சேரி அரசு புகுத்தியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. புதுச்சேரி அரசு மெச்சத்தக்க நடைமுறையைத் தொடங்கியிருக்கிறது.

பிரபஞ்சன்

இந்த மரபு, இனிவரும் காலங்களில் எல்லா நிலங்களிலும் தொடர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இதுபோன்ற மரபுகளை தமிழ்நாடு அரசும் பின்பற்ற வேண்டும். எழுத்தாளர் ஜெயகாந்தன், முனைவர் க.ப.அறவாணன் போன்ற மேதைகளை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவே இல்லை என்பது பெருந்துயரம். பெரும்பாவலன் பாரதியைக் கண்டுகொள்ளாத தமிழ்ச்சமூகம் என்ற அவப்பெயரை இனிவரும் காலங்களில், எல்லா எழுத்தாளுமைகளையும் இருக்கும் பொழுதும் மறைந்த பின்னும் கொண்டாடி மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க