வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (25/12/2018)

கடைசி தொடர்பு:11:50 (25/12/2018)

`5 ஆண்டுகள் குடியிருந்தாலே பட்டா!' - புறம்போக்கு நிலங்களுக்கு புதிய அரசாணை

புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்தால், அவர்களுக்குப் பட்டா வழங்குவதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 

தமிழக அரசு

தமிழகம் முழுவதும் புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் பொதுமக்கள், `தங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும்' எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி அரசு ஆக்கிரமிப்பு நிலங்களை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடந்தது. அதில், ஆக்கிரமிப்பு நிலங்களை வரைமுறைப்படுத்துவதற்கான நெறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று  ஓர் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பழனிசாமி

அதில், `கடந்த 5 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக உள்ள ஆக்கிரமிப்புகளை வரைமுறைசெய்து பட்டா வழங்க கோரிக்கைகள் தொடர்ந்துவருகின்றன. அதன்படி,  அரசுக்குத் தேவையில்லாத புறம்போக்கு நிலத்தில் தங்கியிருந்தால், அவர்கள் பட்டா பெறுவதற்குத் தகுதியானவர்கள். அனைத்துவிதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களைத் தவிர்த்துவிட்டு, பிற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து, 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்புசெய்துள்ளவர்கள், இந்தத் திட்டத்துக்கு தகுதியுள்ளவர்கள் ஆவர். அவர்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தை வரைமுறை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த சிறப்பு வரைமுறைத் திட்டத்தை 6 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புறம்போக்கு

இதற்கிடையே, இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற ஆண்டு வருமான வரம்பு, நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களுக்கு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரகப் பகுதியில் 4 சென்ட், நகர்ப் பகுதியில் இரண்டரை சென்ட், மாநகராட்சிப் பகுதியில் 2 சென்ட் அளவுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கலாம்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க