வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (25/12/2018)

கடைசி தொடர்பு:12:25 (25/12/2018)

தந்தையின் சடலத்தைப் பெற முடியாமல் தவித்த மகள்! - உதவிக்கரம் நீட்டிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

`யாருமே உதவ முன்வரல’ - ஆந்திராவில் இறந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலை மீட்கப் போராடும் மகள் − என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இதன் அடுத்தகட்டமாக, ஆட்டோ ஓட்டுநர் உடலை மீட்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 

ஆட்டோ ஒட்டுநர் மகள்

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் சபரிமூர்த்தி. இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, கேரளாவுக்கு வேலைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு கிளம்பியவர், ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில், இறந்து கிடப்பதாகப் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்துக்குத் தகவல் வந்துள்ளது. இந்தச் செய்தியால் அவரது மனைவி பொன்னுத்தாய், மகள் சண்முகலெட்சுமி ஆகியோர் கதறி அழுதனர். சபரிமூர்த்தியின் உடலை கொண்டுவர யாரும் உதவ முன்வரவில்லை. இந்நிலையில், நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொன்னுத்தாய் மற்றும் சண்முகலெட்சுமி, உடலை மீட்டுக் கொண்டு வர உதவுமாறு கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

இப்படியொரு துயரச் செய்தி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகளான தீபன் சக்கரவர்த்தி, மணிகண்டன் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி சபரிமூர்த்தியின் உடலை, பழனிசெட்டிபட்டிக்குக் கொண்டு வர உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.