வெளியிடப்பட்ட நேரம்: 15:18 (25/12/2018)

கடைசி தொடர்பு:15:18 (25/12/2018)

``நாத்திகர்களுக்கு மட்டுமல்ல; ஆத்திகர்களுக்கும் பெரியார்தான் தலைவர்" - எழுத்தாளர் பாமரன்

"`பெரியார் சிலையை உடைப்பேன்' என்கிறார் ஒருவர். பெரியார் சிலைக்கு மாலை போட்டால் வழக்குப் போடுகிறது இந்த அரசு. அவர்களின் அரசியலை, அடக்குமுறையை எதிர்த்து நிற்கிறது நம் கூட்டம். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் மேல் திணிக்கப்படும் வெறுப்பு அரசியலை பெரியாரைக்கொண்டு நாம் முறியடிக்க வேண்டும்."

``நாத்திகர்களுக்கு மட்டுமல்ல; ஆத்திகர்களுக்கும் பெரியார்தான் தலைவர்

நாத்திகர்களுக்கு மட்டுமல்ல; ஆத்திகர்களுக்கும் தந்தை பெரியார்தான் தலைவர் என்று திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் பேசிய எழுத்தாளர் பாமரன் தெரிவித்தார்.

தந்தை பெரியாரை ஏற்றுக்கொண்ட தேர்தல் அரசியலில் கலந்துகொள்ளாத 160-க்கும் மேற்பட்ட இயக்கங்களை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டியக்கம் ஒருங்கிணைத்த `கருஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு' திருச்சியில் நடைபெற்றது. முக்கியத் தலைவர்கள் பலரும், திரைப்பிரபலங்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். பெரியாரின் கொள்கைகளை முன்னிறுத்தி, சமகாலப் பிரச்னைகளுக்குத் தீர்வாக, 25 தீர்மானங்கள் மாநாட்டு அரங்கில் நிறைவேற்றப்பட்டன. பெரியாரின் 45-வது நினைவுநாளையொட்டி, அவரைப் பற்றி மாநாட்டில் பேசியவர்களின் உரையில் சிலவற்றைக் காண்போம்.   

பெரியார் நினைவு நாள் - கருஞ்சட்டை பேரணி

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ``வெறும் காலி இருக்கைகளை வைத்துக் கூட்டம் நடத்துகிற காவிக் கூட்டம் அல்ல நாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளோம். இது வாக்கு சேகரிப்பதற்காக நடக்கிற கூட்டமும் இல்லை. கொள்கையின்பால் மக்களை அரசியல்படுத்தும் கூட்டம். `பெரியார் சிலையை உடைப்பேன்' என்கிறார் ஒருவர். பெரியார் சிலைக்கு மாலை போட்டால் வழக்கு போடுகிறது இந்த அரசு.

பெரியார் கருஞ்சட்டை பேரணி மாநாட்டில் திருமுருகன் காந்திஅவர்களின் அரசியலை, அடக்குமுறையை எதிர்த்து நிற்கிறது நம் கூட்டம். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் மேல் திணிக்கப்படும் வெறுப்பு அரசியலைப் பெரியாரைக்கொண்டு நாம் முறியடிக்க வேண்டும். மாநாடு என்பது தேர்தல் அரசியலில் பங்குகொள்ளும் தலைவர்கள், மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களை வசைபாடுவதற்காகவே நடத்தப்படுகிறது. ஆனால், மக்களுக்கு அரசியல் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த ஊர்கள் தோறும் இதுபோன்ற கூட்டங்களை நடத்த வேண்டும்" என்றார். 

எழுத்தாளர் பாமரன் பேசுகையில், ``நான் பெரியாரைக் குறைத்து மதிப்பிட்டு விட்டேன். தந்தை பெரியார் எனக்கு மட்டுந்தான் சொந்தம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். `பெரியார் சிலையை உடைத்து விடுவேன்' என்று ஒருவர் சொன்னபோது, கடவுளைக் கும்பிடாதவனைக்காட்டிலும் அதிகம் கடவுளைக் கும்பிடுகிறவன் வெகுண்டெழுந்தார்கள். என்னுடைய அம்மா சாமி கும்பிடுவார், அவர் சொல்கிறார் `பெரியார் சிலை மீது கைவைத்தவரைக் காலில் கிடப்பதைக்கொண்டு அடிப்பேன்' என்று.

பெரியார் கருஞ்சட்டை பேரணி, மாநாட்டில் எழுத்தாளர் பாமரன் சில ஆண்டுகளுக்கு ஒரு பத்திரிகையில் ஒரு கேள்வி `தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால்?' அதற்கு அந்தப் பத்திரிகையாசிரியர் எழுதுகிறார் `தந்தை பெரியார் தமிழகத்தில் பிறந்திருக்காவிட்டால், இங்கு இத்தனை கோயில்கள் வந்திருக்காது' என்று. அதற்கு அடுத்த வாரம் அந்தப் பத்திரிகையில் நான் எழுதினேன் ``நாய், பன்றிகள் நடமாடும் சாலையில் பட்டியலின மக்கள் நடமாடக் கூடாது, கோயிலுக்குள் வந்து சாமி கும்பிடக் கூடாது, கோபுரத்தை பார்த்துக் கும்பிட்டுவிட்டுச் செல்லவேண்டும்' என்றிருந்த நிலைமையை 1924-ம் ஆண்டு வைக்கத்தில் ஆத்திகர்களுக்காகப் போராடி, பொது உரிமையை வாங்கிக்கொடுத்தவர் பெரியார். ஆம். அவர் நாத்திகர்களுக்கான தலைவர் மட்டுமல்ல; ஆத்திகர்களுக்கான தலைவரும்கூட" என்றார்.

இயக்குநர் கரு.பழனியப்பன், ``இந்தக் கூட்டம் ஒன்றில்தான் மேடையில் இருப்பவர்களும் சிந்திப்பவர்களாகவும், கீழே உட்கார்ந்திருப்பவர்களும் சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். காசு கொடுத்து ஆட்களைக் கூட்டிவருகிற  மாநாடுகளைத்தான் கண்டிருக்கிறேன். ஆனால், மாநாட்டுக்கு ஆகும் செலவை வந்திருக்கும் மக்களிடமே வாங்கியிருக்கிறார்கள். அதுவும் அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே ஒரு லட்ச ரூபாய் சேர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இது எவ்வளவு பெரிய விஷயம்.

பெரியார் கருஞ்சட்டை பேரணி, மாநாட்டில் கரு பழனியப்பன் மாநாட்டுக்கு வந்திருப்பவர்களின் வயது சராசரியாக 25 ஆக இருக்கிறது. ஏனென்றால், பெரியார் காலம் தாண்டிச் சிந்தித்திருக்கிறார். எனவேதான் பெரியார் இறந்து 20 ஆண்டுகள் கழித்து பிறந்தவர்கள்கூட இந்த மாநாட்டில் பங்கேற்று, அவரைத் தங்கள் ஹீரோவாக முன்னிறுத்தி இருக்கிறார்கள். பெரியார் ஒருநாளும் மக்கள் மன்றத்தில், தெருவில் பேசியதற்காக மன்னிப்பு கேட்டவர் இல்லை. `நான்தான் பேசினேன்' என்று தைரியமாகக் கூறியவர். ஒருமுறைகூட, தான் எழுதியதற்கோ, தான் பேசியதற்கோ நீதிமன்றத்தில் மண்டியிட்டது இல்லை. `அட்மின் கூறினார்' என்று ஏமாற்றியதில்லை. அதனால்தான் அவர் பெரியார். அதனால்தான் அவர் எல்லோருக்கும் ஹீரோவாக இருக்கிறார்" என்றார்.

ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன்ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில், ``சமீபத்தில் ஐந்து சமூக ஆர்வலர்களை அரசு கைது செய்தபோது, அதை எதிர்த்து வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர், அவர்களை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால், அவர்களுக்குப் பிணை கிடைக்கவில்லை. இன்னும் அவர்கள் சிறையில்தான் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சாதாரண மாஜிஸ்திரேட், திருமுருகன் காந்தியை `ரிமாண்ட் செய்யமாட்டேன்' என்றார்.

அதேமாதிரி ஒரு பெண் நீதிபதி மலர்விழி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், திருமுருகன் காந்தியை ரிமாண்ட் செய்யமாட்டேன்' என்றார். `பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை ரிமாண்ட் செய்யமாட்டேன்' என கோபிநாத் என்ற மாஜிஸ்திரேட் சொன்னார். கரூரில் சுப்பையன் என்ற மாஜிஸ்திரேட், `அமராவதி ஆற்றில் மரம் வெட்டுபவனைச் சிறைக்கு அனுப்பமாட்டேன். அவர் ஆற்றைச் சுத்தம்தான் செய்கிறார்' என்றார். நிச்சயமாக, இவர்கள் பெரியாரின் பேரப்பிள்ளைகள் என்பதால்தான், இவ்வாறு முற்போக்காக இருக்கிறார்கள் என்பது என் கருத்து. அன்று ராஜாஜியை ஆட்சிக்கட்டிலிலிருந்து கீழிறக்கி காமராஜரை பெரியார் முன்னிறுத்தினார். கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகளை உள்ளே வரவிடாமல் வைத்திருக்கிறார்கள் என்றால், அது பெரியாரின் மண்" என்றார்.

சாதிச் சங்கத் தலைவர்கள் முதற்கொண்டு, பெயருக்குப் பின்னால் தங்கள் சாதிப் பெயர்களைப் போடுவதில்லை என்பதிலேயே அடங்கியிருக்கிறது பெரியார் செய்த தொண்டு. ஆம், பெரியார் இறந்து 45 ஆண்டுகள் கழித்தும், அவருக்காகப் பதாகை ஏந்தி லட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு வருகிறார்கள் என்றால் மானுடத்திற்காக யோசித்த பெரியாரின் மண்தான் இது....


டிரெண்டிங் @ விகடன்