வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (25/12/2018)

கடைசி தொடர்பு:22:28 (25/12/2018)

`காதலியை மீட்டுத் தராமல் ஏமாற்றினாரா கிளி ஜோதிடர்?!' - திருப்பூர் படுகொலையின் அதிர்ச்சி பின்னணி

திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், கொலையாளியைப் பிடிக்க தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது காவல்துறை. 

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்துள்ள பாரதிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் திருப்பூர் குமரன் சாலை பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே அமர்ந்து கிளி ஜோசியம் பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தெருவில் நடந்துசென்று கொண்டிருந்த ஜோதிடரை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார். பட்டப்பகலில் மக்கள் கூட்டம் நிறைந்த சாலையில் நடந்தேறிய இந்தச் சம்பவம் பொதுமக்களை மட்டுமல்லாமல், காவல்துறையையும் சற்று பதற்றத்தில் ஆழ்த்திவிட்டது. `ஹெல்மெட் அணிந்துகொண்டு ஜோசியர் ரமேஷை கொலை செய்த மர்ம நபர் யார்?' என்பதைக் கண்டறிய தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள் காவல்துறையினர்.

சம்பவ இடத்தில் கொலை செய்துவிட்டுத் தப்பியோடும்போது, சில துண்டுப் பிரசுரங்களை கொலை நடந்த இடத்தில் வீசிவிட்டுச் சென்றிருந்தார் அந்த மர்ம நபர். இதையடுத்து, அந்தத் துண்டுப் பிரசுரங்களில் அடங்கியிருந்த தகவல்களை வைத்து, ஜோதிடர் ரமேஷுடன் ஏற்கெனவே முன்விரோதத்தில் இருந்த ரகு என்ற நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர் போலீஸார்.

ரகுவின் பின்னணி குறித்து விசாரித்தோம்.

நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு. இவர் ஏற்கெனவே திருமணமான ஒரு பெண்ணுடன் திருப்பூரில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, அந்தப் பெண் ரகுவை விட்டு விலகி தன் கணவருடனேயே சென்றுவிட்டார். இதனால் மன வருத்தத்துக்கு ஆளான ரகு, கடந்த 2016-ம் ஆண்டு ஜோதிடர் ரமேஷை சந்தித்து, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற காதலி பிரியாவை மாந்த்ரீகம் மூலம் மீட்டுத்தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு ரமேஷும் ஒப்புக்கொண்டு ரகுவிடம் பணத்தைக் கறக்க ஆரம்பித்துள்ளார்.

ஆனால், சொன்னபடி காதலியை மீட்டுத் தராமல் தொடர்ந்து காலம் கடத்திக்கொண்டே இருந்ததால் கோபமடைந்த ரகு, கடந்த வருடம் தன் நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு வந்து ஜோதிடர் ரமேஷை தாக்கியிருக்கிறார். அந்த விவகாரம் காவல்துறைக்குச் செல்ல, அப்போது இருவரையும் அழைத்துப் பேசி எச்சரித்து அனுப்பினர் காவல்துறையினர். இந்தநிலையில் சிலகாலம் அமைதியாக இருந்த ரகு, தற்போது மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாகி ஜோதிடர் ரமேஷைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. `தற்போது தலைமறைவாக இருக்கும் ரகு காவல்துறையிடம் சிக்கினால் மட்டுமே, கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்' என்கின்றனர் திருப்பூர் போலீஸார்.