வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (25/12/2018)

கடைசி தொடர்பு:14:50 (25/12/2018)

`எங்கள் சாதனைகளைச் சொல்வோம், வெல்வோம்' - தமிழிசை பேட்டி

தமிழகத்தில் நல்லது நடந்தால்கூட, அதை மக்களிடம் எடுத்துச் செல்லக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிச் செயல்படுகின்றனர். 

``மக்களிடம் நல்ல சாதனைகளைச் சொல்வோம், அதன் மூலம் தேர்தலில் வெல்வோம்” என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறி, காங்கிரஸ் அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. கடன் தள்ளுபடி செய்த பிறகும்கூட அங்கு உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில்தான் விவசாயிகள் அதிகளவு உயிரிழந்துள்ளனர்.

ஆனால், நாங்கள் விவசாயிகள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி வருகிறோம். பல பொருள்களுக்கு ஜீரோ சதவிகிதம்தான் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. 136 பொருள்களுக்கு வரியே இல்லை. தமிழகத்தில் நல்லது நடந்தால்கூட, அதை மக்களிடம் எடுத்துச் செல்லக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிச் செயல்படுகின்றனர். நல்லது செய்தால் கூட, நன்றி சொல்லக் கூடாது என்று சுயநலமாக இருந்து வருகின்றனர். தி.மு.க, காங்கிரஸ் ஆகியவை மக்களிடம் தோல்வியடைந்த கூட்டணி. ஜனவரி மாதம் முதல் வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல இருக்கிறோம். வாக்குச் சாவடி மாநாடுகளை நடத்த இருக்கிறோம். மக்களிடம் எங்களது நல்ல சாதனைகளைச் சொல்ல இருக்கிறோம். அதன் மூலம் வெல்ல இருக்கிறோம்” என்றார்.