வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (25/12/2018)

கடைசி தொடர்பு:16:00 (25/12/2018)

வேலைக்கே வராமல் போராட்டம்! - அதிர்ச்சி கொடுத்த அறநிலையத்துறை அதிகாரிகள்

ந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் அனைவரும் கூட்டாகப் பணிக்கு வராமல் விடுப்பில் இருக்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 

தமிழகத்தில் 36,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவையெல்லாம் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வருகின்றன. கோயில்களின் நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டு, மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு செயல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்நிலை, இடைநிலைக் கோயில்களுக்குத் துணை ஆணையர், இணை ஆணையர் பொறுப்பு வகித்து வருகின்றனர். 

அறநிலையத்துறை


அண்மையில், அறநிலையத்துறையின் திருப்பணிகள் கூடுதல் ஆணையர் கவிதாவும் கூடுதல் ஆணையர்(பொது) திருமகளும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அறநிலையத்துறை அதிகாரிகள் மீது அடுத்தடுத்த வழக்குகளைப் பதிவதற்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, இணை மற்றும் துணை ஆணையர்கள் 30 பேர் விடுப்பு எடுத்துக்கொண்டும் அலுவலகத்துக்கு வராமலும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் அறநிலையத்துறையின் கடைநிலை செயல் அலுவலர்களும் ஈடுபட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.