வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (25/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (25/12/2018)

`ஸ்டெர்லைட் போராட்டத்தில் குழந்தைகள்!’ - போராட்டக்காரர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் குழந்தைகளைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக இரண்டு அமைப்புகள் மற்றும் கிராம மக்கள் மீது 3 பிரிவுகளில் தூத்துக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் எனத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு அளித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வருபவர்களும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடிட சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தியும், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், குழந்தைகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வரையப்பட்ட ஓவியங்களை ஏந்தியும், ஆலைக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பி ஆட்சியர் அலுலகத்தின் வெளிப்புற நுழைவு வாயில் முதல் உள்புற நுழைவு வாயில் வரை பேரணியாகக் கோஷங்கள் எழுப்பியபடியே வந்தனர். பின்னர், 5 குழந்தைகள் மட்டும் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டனர். இதே போல, பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள், கையில் தேசியக்கொடியுடன் ஸ்டெர்லைட் ஆலை குறித்து மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோஷம் முழங்க அழைத்து வரப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர்

இவர்களைத் தொடர்ந்து தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் குழந்தைகளை அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பள்ளி செல்லும் குழந்தைகளைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியமைக்காகத் தமிழர் கூட்டமைப்பு, தமிழ்ப் புலிகள் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணி ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரணி

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, ``ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையைத் தொடரவும் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் 21-ம் தேதி வரை இதே நிலை தொடரும். ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டுடன் உள்ளது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தற்போதைய சூழலில் போராட்டம் நடத்தவும் தேவையில்லை. ஆலைக்கு எதிராக யார் வேண்டுமானாலும் மனு அளிக்கலாம். ஆனால், போராட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க