கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்ட ஹெச்.ஐ.வி ரத்தம் - அதிர்ச்சி கொடுத்த சாத்தூர் அரசு மருத்துவமனை | HIV blood transfer to pregnant lady

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (25/12/2018)

கடைசி தொடர்பு:16:55 (25/12/2018)

கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்ட ஹெச்.ஐ.வி ரத்தம் - அதிர்ச்சி கொடுத்த சாத்தூர் அரசு மருத்துவமனை

விருதுநகர் அருகே 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றியது தொடர்பாக சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி இரண்டாவது முறையாகக் கர்ப்பமடைந்துள்ளார். 8 மாத கர்ப்பிணியான அவர் சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரத்தம் குறைவாக இருப்பதால் அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி, கடந்த 20 நாள்களுக்கு முன் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், 4 நாள்களுக்குப் பின் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, அரசு மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து விருதுநகர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டவரிடமிருந்து அந்தப் பெண்ணுக்கு எங்கேயிருந்து ரத்தம் ஏற்றப்பட்டது. எப்படி ஏற்றப்பட்டது என்பது குறித்து சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ரத்த வங்கி பொறுப்பாளர்கள், சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆய்வக நுட்பனர்கள் போன்றோரிடம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், டிசம்பர் 3-ம் தேதி அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதித்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதும், அந்த ரத்தத்தில் இருந்த கிருமியின் மூலமே இந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று பரவியது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தற்போது விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 3 பேரை மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரனிடம் கேட்டபோது, “கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக முதற்கட்டமாக சிவகாசி அரசு மருத்துவமனை ஆய்வக நுட்பனர்கள் 2 பேர் மற்றும் நம்பிக்கை மைய ஆலோசகர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் யார் என்பது உறுதியானால் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுவர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு மருத்துவமனையில் ஓட்டுநர் பணிக்குப் பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.