உயர்மின் கோபுரம் திட்டத்துக்கு எதிர்ப்பு - சேற்றில் இறங்கிப் போராடிய விவசாயிகள்! | Coimbatore farmers protest against electricity project

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (25/12/2018)

கடைசி தொடர்பு:18:30 (25/12/2018)

உயர்மின் கோபுரம் திட்டத்துக்கு எதிர்ப்பு - சேற்றில் இறங்கிப் போராடிய விவசாயிகள்!

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக, கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாயிகள் சேற்றில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள்

விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு, கோவை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள்  எதிர்ப்பு தெரிவித்து தொடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், 9-வது நாளாக இன்றும், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இ்தில், ஒரு பகுதியாக 5 பெண்கள் உட்பட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். .

உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்குப் பதிலாக சாலை ஓரங்களில் புதைவடமாக மின் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனவும், ஏற்கெனவே உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பு குறைந்ததற்கு முறையான இழப்பீடும், கோபுரங்கள் மற்றும் மின் பாதைகள் அமைந்துள்ள இடத்துக்கு வருட வாடகையும் வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று போராட்டத்தின் ஒரு பகுதியாக போராட்டப் பந்தல் அருகே குழிதோண்டி, தண்ணீர் நிரப்பி விவசாயிகள் தண்ணீர்  குழியில் இறங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் சேற்றில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
``விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணர்த்துவதற்காகதான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்" என்று விவசாயிகள் தெரிவித்தனர்.