வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (25/12/2018)

கடைசி தொடர்பு:19:00 (25/12/2018)

பச்சிளம் குழந்தையைக் கொன்ற கொடூரத் தந்தை - மன உளைச்சலால் சிறையில் தற்கொலை!

பெற்ற குழந்தையைக் கொடூரமாகக் குளத்தில் வீசிக் கொலை செய்த கொடூரத் தந்தை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மன உளைச்சல் காரணமாக இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. 

மனைவியுடன் இசக்கிமுத்து (பழைய படம்)

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், இசக்கிமுத்து. இவருக்கும் சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்ற ஆனந்திக்கும் இடையே கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. 

அரசு மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுத்த ஆனந்தி, தன் தாய் வீடு இருக்கும் சீதபற்பநல்லூர் கிராமத்துக்கு வந்துள்ளார். குழந்தையைப் பார்க்க வந்த இசக்கிமுத்து குழந்தையுடன் ஆனந்தியையும் தன்னுடன் அய்யனார்குளம் வருமாறு அழைத்துள்ளார். இசக்கிமுத்து மதுபோதையில் இருந்ததால் அவருடன் மகளையும் குழந்தையையும் அனுப்ப மாமியார் மறுத்துள்ளார். அதனால் இசக்கிமுத்துக்கும் அவரது மனைவி ஆனந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திரும்பிச் சென்றுள்ளார் 

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதி இசக்கிமுத்து மீண்டும் மனைவியைப் பார்க்க சீதபற்பநல்லூர் வந்துள்ளார். அப்போதும் அவருடன் வர ஆனந்தி மறுத்துவிட்டதால், மதுபோதையில் இருந்த இசக்கிமுத்து அங்கேயே தங்கிவிட்டார். மறுநாள் கண்விழித்துப் பார்த்தபோது, குழந்தையையும் இசக்கிமுத்துவையும் காணவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த ஆனந்தி சீதபற்பநல்லூர் போலீஸில் புகார் செய்தார். 

சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்திய போலீஸாரிடம், தன்னுடன் மனைவி வர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பிறந்து 22 நாள்களே ஆகியிருந்த குழந்தையைத் தூக்கிச் சென்று அருகில் இருந்த குளத்தில் வீசிவிட்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார். அதனால் அவரைக் கைது செய்த போலீஸார், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 

இசக்கிமுத்து

பெற்ற குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த இசக்கிமுத்துவைச் சந்திக்கவோ அவருக்கு சட்டரீதியாக உதவி செய்யவோ உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. அத்துடன், மனைவியும் அவரைச் சிறைக்குச் சென்று சந்திக்கவில்லை. அதனால் அவர் கடந்த சில வாரங்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக சிறைத்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இன்று அவர் திடீரென சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

சிறைக் கைதிகள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தை ஆய்வு செய்த சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், பெருமாள்புரம் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து சென்ற போலீஸார், இசக்கிமுத்துவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் 1000-க்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பகல் நேரத்தில் சிறைச்சாலை வளாகத்தில் இருக்கும் மரத்தில் விசாரணைக் கைதியான இசக்கிமுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.