வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (25/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (25/12/2018)

மறைந்து போகாத மத நல்லிணக்கம் - 40 வருடங்களாக இந்துக்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா!

நெல்லை மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றில் கடந்த 40 வருடங்களாக இந்துக்கள் கிறிஸ்துமஸ் விழாவை விரதம் இருந்து கொண்டாடி மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர் 

கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்து பிறப்பு தினத்தை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் இந்தப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. நெல்லையிலும் கிறிஸ்தவர்கள் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்றதுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். 

இந்த நிலையில், நெல்லை புறநகர்ப் பகுதியான தச்சநல்லூர் அருகே இருக்கும் கீழக்கரை என்ற குக்கிராமம் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுமார் 50 குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் இந்தக் கிராமம், அனைவராலும் பேசப்படுவதற்கு காரணம், இந்துக்களான இந்தக் கிராம மக்கள் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவதுதான். இந்த விழாவை மிகுந்த உற்சாகத்துடன் அவர்கள் கொண்டாடும் விவரம் தற்போது தெரியவந்திருக்கிறது. 

இந்துக்கள் கொண்டாடிய விழா

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வால்பாறை பகுதியில் இருந்து நெல்லையில் உள்ள கீழக்கரைக்குக் குடிபெயர்ந்த நாடோடி சமூகமான காட்டுநாயக்கர் இனத்தைச் சேர்ந்த மக்கள் இந்தக் கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடும்ப தெய்வமாக வனப்பேச்சி இருந்தபோதிலும், அந்தோணியாரையும் இஷ்ட தெய்வமாகவே வழிபடுகிறார்கள். இந்த நிலையில், கிறிஸ்து பிறப்பு விழாவையும் அவர்கள் உற்சாகமாகக் கொண்டாடுவதை பல வருடங்களாக வழக்கமாக வைத்திருக்கிறார்கள். 

கிறிஸ்துமஸ் பண்டிகையை அவர்கள் 13 நாள்கள் கொண்டாடுகிறார்கள். இந்தப் பண்டிகைக்காக காவி உடை தரித்து விரதம் இருக்கும் அவர்கள் 12 நாள்களுக்குச் சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறார்கள். கடைசி நாளில் ஆடு, கோழி பலியிட்ட பின்னர், கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். பின்னர், அந்தோணியார், கன்னிமேரி, மிக்கேல் அதிதூதர் ஆகியோரின் திருவுருவத்தை அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் எடுத்து திருத்தேர் பவனியாக ஊர்வலம் வருகிறார்கள். 

இந்துக்களின் கிறிஸ்துவ விழா

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி இன்று திருத்தேர் பவனி நடைபெற்றது. கோயிலின் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம், கீழக்கரை மற்றும் தச்சநல்லூர் பகுதியின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து மீண்டும் கோயிலைச் சென்றடைந்தது. இந்த விழா குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ``கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்த விழாவை நாங்கள் நடத்தி வருகிறோம். நாங்கள் வனப்பேச்சி, முருகன், விநாயகர் வழிபாடு நடத்துவது போலவே அந்தோணியார், மிக்கேல் அதிதூதர் வழிபாடு நடத்தி வருகிறோம். 

அதனால் பிற விழாக்களைப் போலவே கிறிஸ்துமஸ் விழாவையும் சிறப்பாகக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இந்த விழாவை நடத்துவது எங்களுக்கு மனஅமைதியையும் வாழ்க்கையில் பிடிப்பையும் ஏற்படுத்துகிறது என்பதால் ஆண்டாண்டு காலமாகவே அனைவரும் தவறாமல் இந்த விழாவில் பங்கேற்று வருகிறோம்’’ என்கிறார்கள். மதத்தின் பெயரால் அடித்துக்கொல்லும் மக்கள் வாழும் சூழலில், நெல்லையின் கீழக்கரை மக்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே!