வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (25/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (25/12/2018)

`திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்த காதலன்!’ - போராட்டத்தில் குதித்த இளம்பெண்

திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்த காதலனைக் கைது செய்யக்கோரி இளம்பெண், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலன்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் சுஜிதா (25). டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமூகவலைதளம் மூலம் காட்பாடியை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த நாகேஷ் மகன் மனோஜ்குமார் (26) என்பவர் சுஜிதாவுக்கு அறிமுகமாகியுள்ளார். மனோஜ் தான் சிங்கப்பூரில் வேலை செய்வதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இருவரும் போன் நம்பரைக் கொடுத்து அடிக்கடி பேசினர். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மனோஜ்குமார், சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்தார். உடனடியாக வாணியம்பாடிக்குச் சென்று சுஜிதாவைச் சந்தித்தார். திருமண ஆசைகாட்டி, ஏலகிரி மற்றும் சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு அந்தப் பெண்ணை மனோஜ்குமார் அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சுஜிதாவிடம் பேசுவதை மனோஜ்குமார் தவிர்த்தார். அதன்பிறகே, காதலனுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இருப்பது அந்தப் பெண்ணுக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அப்பெண், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், ‘தன்னை ஏமாற்றிய காதலன் மனோஜ்குமாரை கைது செய்யக்கோரி’ வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். பின்னர் சிறிது நேரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ‘தன்னை ஏமாற்றிய காதலனை கைது செய்ய வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’ என்று அதிகாரிகளிடம் மன்றாடினர் சுஜிதா.

அப்போது, விஷம் குடித்ததாக இளம்பெண் சுஜிதா சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் பழைய அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனையில், சுஜிதா விஷம் குடிக்கவில்லை என்பது தெரியவந்தது. பின்னர், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுஜிதாவிடம், புகார் பெறப்பட்டது. போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். காதலன் மனோஜ்குமார் தலைமறைவாக உள்ளார். அவரின் தந்தை நாகேஷை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.