வெளியிடப்பட்ட நேரம்: 23:45 (25/12/2018)

கடைசி தொடர்பு:23:45 (25/12/2018)

நடுக்கடலில் கேக்வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடிய கன்னியாகுமரி மீனவர்கள்!

ன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளில் குடும்பத்தினருடன் கடலில் சென்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்கள்.

கிறிஸ்துமஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு ஒகி புயல் காரணமாக மீனவர்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடவில்லை. இந்த ஆண்டு மீனவர்கள் குடும்பத்தினருடன் படகுகளில் சென்று கடலில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினர். ஒவ்வொரு குடும்பத்தினரும் மதிய உணவுகளுடன் படகுகளில் கடலுக்குச் சென்றனர். மதிய உணவைக் கடலில் வைத்து குடும்பத்தினருடன் உண்டு மகிழ்ந்தனர். தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் தலைமையில் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் கடலுக்குச் சென்றவர்கள் படகில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினர்.

கிறிஸ்துமஸ்

அந்தப் படகில் கிறிஸ்துமஸ் குடிலும் அமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சர்ச்சில் கூறுகையில், ``கடந்த ஆண்டு விசைப் படகுகளில்  கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் ஒகி புயலில் சிக்கி 204 மீனவர்கள் இறந்தனர். இதனால் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா பெரிய அளவில் கொண்டாடவில்லை. இந்த ஆண்டு படகில் சென்று கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினோம். கடல் தாய்க்கும் மீன்களுக்கும் கேக் வழங்கினோம்" என்றார்.