``மண்ணின் மக்களுக்கு 90% வேலை!" -தமிழக அரசுக்கு பெ. மணியரசன் கோரிக்கை | 90 percent of jobs for tamilnadu local's - Maniyarasan Demand

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (26/12/2018)

கடைசி தொடர்பு:08:00 (26/12/2018)

``மண்ணின் மக்களுக்கு 90% வேலை!" -தமிழக அரசுக்கு பெ. மணியரசன் கோரிக்கை

'' மிழ்நாட்டில் புதிதாக வரவுள்ள தனியார் தொழில் நிறுவனங்களில், மண்ணின் மக்களுக்கு  90 சதவிகித வேலை வழங்கிட தமிழ்நாடு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும் '' எனத் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மணியரசன்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

``கடந்த 24 - ம் தேதி கூடிய தமிழ்நாடு அமைச்சரவை, 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் 16 தனியார் தொழிலகங்களை தமிழ்நாட்டில் நிறுவிட அனுமதி கொடுப்பது என்று முடிவுசெய்துள்ளது. இதன்மூலம், 34 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த 16 தொழிலகங்களில், தென் கொரியா தொழிலகங்கள் இரண்டின் பெயர் மட்டும் சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் தொழிலகங்களுக்கான அனுமதியை வழங்கும்போது, அவை தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வகையிலான தொழில்நுட்பங்களைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களா என்பதையும், அந்த நிறுவனத்தின் கடந்த கால வரலாற்றையும் பார்த்து, அதற்கேற்ப தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க வேண்டும். ஆபத்தான தொழில்நுட்பம் எனில், அந்தத் தொழிலகங்களுக்கு தொடக்கத்திலேயே அனுமதி மறுக்க வேண்டும்.

இப்போது வரவுள்ள புதிய தொழிலகங்கள், தமிழ்நாட்டு மக்களின் தொழில் – வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில் இருக்குமா என்பது ஐயமாக உள்ளது.

தமிழக சட்டமன்றம்

பன்னாட்டு மற்றும் வெளி மாநில நிறுவனங்களுக்கு முன்னுரிமைகொடுக்கப்படும் என்பதுபோல தெரிகிறது. அப்படியென்றால், தொழில் துறை வளர்ச்சியில் தமிழ்த் தொழில் முனைவோர் மேலும் மேலும் பின்னுக்குத் தள்ளப்படக்கூடிய சூழல் உருவாகும்.

இது ஒருபுறமிருக்க , 34,000 பேருக்கான வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு முன்னுரிமை தரப்படுமா என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை. தமிழ்நாட்டில் உரிய தகுதிபெற்று 90 லட்சம் பேருக்கு மேல் வேலை தேடி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கிறார்கள்.

கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மண்ணின் மக்கள் வேலை முன்னுரிமைக்குச் சட்ட ஏற்பாடு இருப்பதுபோல, தமிழ்நாட்டில் சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய பேரியக்கம் கோரிவருகிறது.

 சமீபத்தில், மத்தியப்பிரதேசத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் முதலமைச்சர் கமல்நாத், மத்தியப்பிரதேச மக்களுக்கு 70 விழுக்காடு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்குத்தான் தொழில் துறையில் ஊக்கங்களும், சலுகைகளும் அளிக்கப்படும் என அறிவித்தார்.

கமல்நாத்

இந்தியாவில், மற்ற மாநிலங்களில் இவ்வளவு எடுத்துக்காட்டுகள் இருந்தும்கூட, தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்ட ஏற்பாடு செய்யாதிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, புதிதாக உருவாக்கப்படும் 34,000 வேலைகளில் 90 சதவிகித வேலைகளை தமிழர்களுக்கு வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டும்தான் அரசு அனுமதியும், சலுகைகளும் தர வேண்டும். அதற்கான சட்ட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க