``அணைகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வர வேண்டும்!” -இயக்குநர் கெளதமன் | The Supreme Court will have to proceed with the public welfare case - Director Gauthaman

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/12/2018)

கடைசி தொடர்பு:06:00 (26/12/2018)

``அணைகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வர வேண்டும்!” -இயக்குநர் கெளதமன்

முல்லைப்பெரியாறு மற்றும்  மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து பொதுநல வழக்கு தொடர வேண்டும் என இயக்குநர் கெளதமன் கூறியுள்ளார்.

கெளதமன்

தேனியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த இயக்குநர் கெளதமன், முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “கடந்த 2011 -ம் வருடம் முல்லைப்பெரியாறு அணை பிரச்னையின் போது உயிழந்த தேனியைச் சேர்ந்த வாலிபர் ஜெயபிரகாஷ் நாராயணனின் நினைவு தினம் இன்று. பலரது உயிர்த் தியாகங்களுக்கு பின்னரும் முல்லைப்பெரியாறு அணையில் தமிழர்களுக்கான உரிமை பறிபோகிறது. முல்லைப்பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்ட கேரள அரசு அனுமதி கேட்டு அதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இயக்குநர் கெளதமன்

இதே போல் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கும் ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  2006 -க்கு பிறகு, காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் இணைந்து வழங்கிய தீர்ப்பில், தமிழக அரசு மற்றும் மக்களின் அனுமதி இல்லாமல் எந்த மாநிலத்திலும் புதிய அணை கட்டக்கூடாது என தெரிவித்தள்ளது. ஆனால் அந்தத் தீர்ப்பினை மீறும் வகையில் தற்போது மத்திய அரசு கேரளா, கர்நாடகவிற்கு புதிய அணை கட்டுவதற்கு ஆய்வறிக்கை தயார் செய்ய அனுமதியளித்துள்ளது. இச்செயல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் செயலாகும். எனவே உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கு தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.