வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (26/12/2018)

கடைசி தொடர்பு:08:40 (26/12/2018)

ஈ.வெ.ரா-வுக்கு `பெரியார்' பட்டம் வழங்கிய பெண் போராளி அன்னை மீனாம்பாள் பிறந்ததினம் இன்று!

பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய போராளி, மீனாம்பாள் சிவராஜ் பிறந்த தினம் இன்று. வாசுதேவப்பிள்ளை - மீனாட்சி தம்பதியருக்கு 1904 - ம் ஆண்டு மகளாகப் பிறந்த இவர், அன்னை மீனாம்பாள் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.  இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் முதன்மை படைத் தளபதியாக விளங்கினார்.

மீனாம்பாள்

இந்தியாவில், ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தச் சட்டம் எவ்வாறு செயல்படுகின்றன, அடுத்த கட்டமாக என்ன மாதிரியான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிவதற்காக, சைமன் குழு இந்தியா வரவிருந்தது. பெரும்பாலான தலைவர்கள், சைமன் குழு இந்தியா வருவதை விரும்பவில்லை. குழு வருகையை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். ஆனால், சைமன் குழு வருகையை ஆதரித்துப் பேசி வரவேற்றவர், அன்னை மீனாம்பாள். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் புலமைபெற்றிருந்தார். தன் 16-வது வயதில் பட்டியலின இயக்கத் தலைவர் சிவராஜ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

பெரியார்

சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலினப் பெண் துணை மேயராகப் பொறுப்பு வகித்த இவர்,  சென்னை மாகாண கௌரவ  நீதிபதி (16 ஆண்டுகள்), திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்) சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (13 ஆண்டுகள்), சென்னை அரசு மருத்துவமனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் என எண்ணற்ற பதவிகளை வகித்துவந்தார். சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈ.வெ.ராமசாமிக்கு, 1938 -ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ’பெரியார்’ என்ற  பட்டத்தை அளித்தவர், அன்னை மீனாம்பாள். 

சென்னை மாநகராட்சி

பட்டியலின மக்கள் மட்டுமல்ல,  ஒவ்வொரு தமிழரும் அறிந்துகொள்ளவேண்டிய, போற்றப்படவேண்டிய ஒரு பெண் போராளி, அன்னை மீனாம்பாள்.

அன்னையின் 115-வது பிறந்தநாளான இன்று அவரைப் போற்றுவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க