`கெஞ்சியும் விடவில்லை; கொன்றுவிட்டோம்' - கள்ளக்காதலனுக்காக கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி! | wife kill his husband for illegal affair

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (26/12/2018)

கடைசி தொடர்பு:11:32 (26/12/2018)

`கெஞ்சியும் விடவில்லை; கொன்றுவிட்டோம்' - கள்ளக்காதலனுக்காக கணவனை கொடூரமாகக் கொன்ற மனைவி!

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனைக் கொலை செய்த மனைவியையும், கொலை செய்ய உதவிய கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர் என மூவரையும் இரண்டே நாளில் கைதுசெய்து போலீஸார் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

காயத்ரிதேவி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா, திருக்கூர்ணம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் மணிவண்ணன். 26 வயதான இவர், அங்கு தனியார் ஊழியராக உள்ளார். இந்நிலையில், கடந்த 23 -ம் தேதி இரவு, கரூரை அடுத்த மணல்மேடு பகுதியில் மணிவண்ணனின் தலை கல்லால் நசுக்கப்பட்டு இறந்துகிடந்தார். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு,  அங்கு விரைந்த அரவக்குறிச்சி காவல் நிலைய போலீஸாருக்கு, 'மணிவண்ணனை யாரோ திட்டமிட்டு கல்லால் நசுக்கி கொலை செய்திருக்கிறார்கள்' என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், மணிவண்ணன் சொந்த மாவட்டத்தை விட்டு, பக்கத்து மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததால், கொலையாளியை நெருங்குவது கடினம் என்றே பலரும் நினைத்தனர். தனது கணவர் மணிவண்ணன் இறந்த தகவலைக் கேட்டதும், திருக்கூர்ணத்தில் இருந்து சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார் அவரின் மனைவி காயத்ரிதேவி. 21 வயதே நிரம்பிய அந்த இளம்பெண், அப்பாவியாக கணவரின் இறந்த உடலுக்கு முன்பு கதறி அழுதார்.

கமலக்கண்ணன்

இதைப் பார்த்த அங்கிருந்த பலரும் காயத்ரிதேவியின் அழுகையைப் பார்த்து கண் கலங்கினர். காயத்ரிதேவியின் அழுகையைப் பார்த்த அரவக்குறிச்சி போலீஸாருக்கும் அவர்மீது சந்தேகம் வரவில்லை. ஆனால், பல கோணங்களில் விசாரித்த போலீஸார், கடைசியில் காயத்ரிதேவியின் பக்கம் திரும்பினர். "என் கணவர் மேல நான் உசுரா இருந்தேன். அவர் இல்லாமப் போனதால், நானும் செத்துப் போயிருவேன்'' என்று கூறிவந்துள்ளார். ஆனால், அவர்மீது இருந்த சந்தேகத்தால், தங்கள் பாணி கிடுக்கிப்பிடி விசாரணையை போலீஸார் நடத்தியுள்ளனர். 

ரூபன்குமார்

போலீஸின் விசாரணையைத் தாக்குப்பிடிக்க முடியாமல், 'கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, கிழக்கூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கமலக்கண்ணனை காதலித்து வந்தேன். எங்கள் வாழ்க்கைக்கு கணவர் இடைஞ்சலாக இருந்ததால் அவரைக் கொலை செய்ய முடிவெடுத்தோம். அதன்படி, கமலக்கண்ணனின் நண்பர்கள் உதவியுடன், கணவர் மணிவண்ணனைக் கொன்றது நான்தான். நைசா பேசி இங்க வரவழைச்சோம். 'என்னை விட்டுரு காயத்ரி. நீ விருப்பப்பட்டபடியே யாரோட வேண்ணாலும் வாழு'ன்னு அவர் கெஞ்சியும் விடவில்லை, கொன்றுவிட்டோம்' என்று உண்மையைக் கூறியுள்ளார் காயத்ரிதேவி.

இச்சம்பவத்தில் காயத்ரிதேவிக்கு துணையாக இருந்த அவரது கள்ளக்காதலனான கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர் ரூபன்குமார் உள்ளிட்ட மூவரையும் கைதுசெய்து, சிறையில் அடைத்திருக்கிறது காவல் துறை. இந்த கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரண்டே நாள்களில் கண்டுபிடித்த அரவக்குறிச்சி காவல் துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.