கரூரை கதிகலக்கும் இணைப்பு விழாக்கள்! - போட்டி போடும் அ.தி.மு.க, தி.மு.க | MR Vijayabaskar move against Senthilbalaji's massive public meeting

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (26/12/2018)

கடைசி தொடர்பு:13:52 (26/12/2018)

கரூரை கதிகலக்கும் இணைப்பு விழாக்கள்! - போட்டி போடும் அ.தி.மு.க, தி.மு.க

 

 செந்தில்பாலாஜி தி.மு.கவில் இணைந்தபோது...

தி.மு.க-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, நாளை கரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, ஸ்டாலின் முன்னிலையில் ஒரு லட்சம் பேரை தி.மு.க-வில் இணைக்க இருக்கிறார். அதற்குப் பதிலடியாகவும், அந்த விழாவை கவனம் பெறாமல்  செய்வதற்காகவும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ம.தி.மு.க-வில் இருந்து விலகிய 12 நிர்வாகிகள் உள்ளிட்ட 1500 பேரை முதல்வர் முன்னிலையில் நாளை அ.தி.மு.க-வில் இணைக்கும் விழாவை நடத்த இருக்கிறார்.

செந்தில் பாலாஜி
 

இதுபற்றி, நம்மிடம் பேசிய கரூர் அரசியல் பார்வையாளர்கள் சிலர்,  "அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. 'அ.ம.மு.க, அ.தி.மு.க இணையப்போகிறது', 'டி.டி.வி.தினகரனுக்கும், செந்தில்பாலாஜிக்கும் இடையில் முட்டல் மோதல்' என்று எழுந்த பல்வேறு தகவல்களைத் தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி, ஸ்டாலின் முன்னிலையில் 2000 ஆதரவாளர்களோடு தி.மு.க-வில் இணைந்தார் செந்தில்பாலாஜி. இந்நிலையில், நாளை அ.ம.மு.க, பா.ம.க உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த ஒரு லட்சம் பேரை தனது தலைமையில் கரூரில் தான் ஏற்பாடுசெய்துள்ள பொதுக்கூட்டத்தில் இணைக்க இருக்கிறார் செந்தில்பாலாஜி. இந்தப் பொதுக்கூட்டத்தில், ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதனால், கொங்கு மண்டல ஆளுங்கட்சி புள்ளிகள் பலரும் குழப்பத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான், நாளை நடைபெற இருக்கும் செந்தில்பாலாஜி நடத்தும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை மீடியா பார்வையில் இருந்து 'மறைத்து' கவனம் பெறாமல் செய்வதற்காக, கரூர் மாவட்ட ம.தி.மு.க-வில் இருந்து விலகிய 1500 பேரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைக்கும் விழாவை போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நாளை நடத்துகிறார். இந்த இரண்டு விழாக்களில் எந்த விழா பரபரப்பாகப்போகிறது என்பது நாளைதான் தெரியவரும்" என்றார்கள்.


 கலையரசன்

இந்நிலையில், ம.தி.மு.க-வில் இருந்து நிர்வாகிகளோடு விலகி அ.தி.மு.க செல்ல இருக்கும் ம.தி.மு.க முன்னாள் அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் கலையரசன், "ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் கபினி சிதம்பரம் தன்னிச்சையாக செயல்பட்டார். நிர்வாகிகளான எங்களை மதிப்பதில்லை. அவரைப் பற்றி பலமுறை வைகோ-விடம் புகார் பண்ணினோம். ஆனால், அவர்மீது வைகோ-வை நடவடிக்கை எடுக்கவிடாமல் கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி தடுத்துவந்தார். அதனால்தான், 'மரியாதை இல்லாத இடத்தில் இருக்க வேண்டாம்'னு, கடந்த 29-ம் தேதி பொறுப்புகள் மற்றும் கட்சியில் இருந்து விலக முடிவெடுத்தோம். நான், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அருண் தங்கவேல், கரூர் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, மாவட்ட துணைச் செயலாளர் கேசவன், ஒன்றியச் செயலாளர்கள் க.பரமத்தி (வடக்கு) அப்பன் பழனிசாமி, தான்தோன்றிமலை (கிழக்கு) தென்றல், தான்தோன்றிமலை (மேற்கு) ஜெயராமன்,கிருஷ்ணராயபுரம் (கிழக்கு) சங்கப்பிள்ளை,(மேற்கு) தமிழ்செல்வன், கடவூர் (தெற்கு) முருகேசன்,தோகைமலை இளங்கோ மற்றும் தான்தோன்றிமலை நகர பொறுப்பாளர் ராஜாமணி, குளித்தலை நகர பொறுப்பாளர் ரவிக்குமார்னு 13 நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கட்சியை விட்டு விலகிக்கொள்வதாக அறிவித்தோம். இதில், மாவட்ட அவைத் தலைவராக இருந்த ராமசாமி மட்டும் பதவியில் இருந்து மட்டும் விலகுவதாக அறிவித்தார்.

அ.தி.மு.கவில் இணைய இருக்கும் முன்னாள் கரூர் மாவட்ட ம.தி.மு.க நிர்வாகிகள்..

மத்தபடி, கட்சியை விட்டு விலகிய நான் உள்பட 13 நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துபேசினோம். வைகோ தி.மு.க கூட்டணியில் இருப்பதால், அங்க போகக் கூடாதுனு முடிவு பண்ணினோம். அதனால், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க-வில் சேர முடிவுபண்ணினோம். அவரும் முதல்வரிடம் தேதி கேட்டார். '27 ம் தேதி இணைப்பு விழாவை வச்சுக்கலாம்'னு மேலிடத்தில் இருந்து தகவல் வரவும், அமைச்சர் தலைமையிலும், முதல்வர் முன்னிலையிலும் நாளை இணைய இருக்கிறோம். எங்களோடு சேர்ந்து 1500 தொண்டர்களும் இணைய இருக்கிறார்கள். இதற்காக, 20 பேருந்துகள் மற்றும் 10 கார்களில் சென்னைக்கு இன்று கிளம்புகிறோம்.நாளை நாங்கள் அ.தி.மு.க-வில் இணைவதற்கும், செந்தில்பாலாஜி நடத்தும் விழாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.