``கல்வி மட்டுமே நல்வழிப்படுத்தாது!" - 'சமூகக் காடு' உருவாக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் | "Students need something more than that of education!" - Government school teachers about their new initiative

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (26/12/2018)

கடைசி தொடர்பு:14:00 (26/12/2018)

``கல்வி மட்டுமே நல்வழிப்படுத்தாது!" - 'சமூகக் காடு' உருவாக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளி

ல்வியைத் தாண்டி, மாணவர்களை சமூகப் பங்களிப்பிலும் ஈடுபடுத்திவருகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் தமிழரசன். பள்ளிகுளம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், சமூக செயல்பாடுகளிலும் மிளிர்கிறார்கள். மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தமிழரசன் ஆகியோர், தற்போது சமூகக் காடு ஒன்றை உருவாக்கும் புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர்.

அரசுப் பள்ளி

``வீடுதோறும் கழிப்பறை, வீதி தோறும் மரங்கள், காடு தோறும் இயற்கை விவசாயம், பயணம் தோறும் துணிப்பை என மாணவர்களின் பங்களிப்புடன் எங்கள் கிராமத்தில் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறோம். எங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. வீடுதோறும் மரம் வளர்க்கும் திட்டத்தைத் தொடங்கினோம். பள்ளிக்கு அருகில்  ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, இயற்கை விவசாயம் செய்தோம். கடந்த ஆண்டு நடைபெற்ற மரம் நடும் விழாவில், `மரக்காடு' ஒன்றை உருவாக்கலாமே என கல்வி அதிகாரி ஒருவர் யோசனை தெரிவித்தார். அதன்படி, பல இடங்களில் வேப்பங்கன்றுகளை நட்டோம். கால்நடைகள் மேய்ச்சலால் அம்மரங்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. எனவே, முன்னுதாரணமாக, பாதுகாக்கப்பட்ட பசுமைக்காடு ஒன்றை உருவாக்க முடிவெடுத்தோம். எங்கள் பள்ளிக்கு அருகில், ஊராட்சிக்கு உட்பட்ட 25 ஏக்கர் புறம்போக்கு நிலம் இருக்கிறது. அதில், `பள்ளிக்காடு' என்ற பெயரில், முதல்கட்டமாக இரண்டு ஏக்கரில் மரம் வளர்க்க அனுமதிபெற்றோம். ஊராட்சி செயலர் 2,000 மரக்கன்றுகளைக் கொடுத்து உதவினார். 

அரசுப் பள்ளி

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன், கடந்த மூன்று நாள்களாக இரண்டு ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகளை நடவுசெய்தோம். தற்போது, மரக்கன்றுகளைச் சுற்றி தற்காலிகமாக வேலி அமைத்திருக்கிறோம். விரைவில் உயிர்வேலி அமைப்போம். அருகிலுள்ள பண்ணைக்குட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து செடிக்கு ஊற்றவும், செடிகளைப் பராமரிக்கவும் ஒரு பணியாளரை நியமித்திருக்கிறோம். மாணவர்கள், விடுமுறை நாள்களில் இந்தப் பசுமைக்காட்டைப் பார்வையிட்டு, பராமரிப்பார்கள். இரண்டு ஆண்டுகளில், நிச்சயம் இந்த இடம் பெரிய பசுமைக்காடாக உருவாகியிருக்கும். இத்திட்டத்தை உதாரணமாகக் காட்டி, `மரம் வளர்ப்போம்; மரங்களை வெட்டாதீர்' என விழிப்புஉணர்வு செய்கிறோம். குறிப்பாக, கல்வி மட்டுமே ஒருவரை முழு மனிதனாக மாற்றிவிடாது. படிப்பு மட்டுமின்றி, மாணவர்களுக்கு சமூக அக்கறையும் தேவை. அதனால்தான், எங்கள் மாணவர்களை அவர்கள் சம்மதத்துடன் சமூகப் பணிகளில் பங்களிப்பு செய்யவைக்கிறோம். அதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்" என மகிழ்ச்சியுடன் கூறுகிறார், தமிழரசன்.