வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (26/12/2018)

கடைசி தொடர்பு:14:02 (26/12/2018)

`அரசு வேலை வேண்டாம்... மனைவிக்கு உயர்தர சிகிச்சை தாங்க ' - சாத்தூர் கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் கண்ணீர்

'கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது ஒரு விபத்து' என விருதுநகர் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி, இரண்டாவது முறையாகக் கர்ப்பமடைந்துள்ளார். 8 மாத கர்ப்பிணியான அவர், சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில், அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரத்தம் குறைவாக இருப்பதால் அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி, கடந்த 20 நாள்களுக்கு முன் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், 4 நாள்களுக்குப் பின் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, அரசு மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது, அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தின்மூலம் அவருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு வந்தது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 3 பேரை மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, அரசு மருத்துவமனை ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் இன்று தனது குடும்பத்தினருடன் சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது உறவினர்கள் அங்கு போராட்டம் நடத்தினர். 

தற்போது, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்திவருகிறார். அவரிடம், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண் மனு கொடுத்துள்ளார். 

அரசு வேலை ...

கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது ஒரு விபத்து ஆகும். கர்ப்பிணிக்கும், அவரது கணவருக்கும் அரசு வேலை தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விருதுநகர் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மனோகரன் தெரிவித்துள்ளார். ஆனால், ``எனக்கு அரசு வேலை தேவையில்லை, மனைவியின் சிகிச்சைதான் முக்கியம். எனது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இனி எங்கள் குடும்பத்திற்கு அரசுதான் பொறுப்பு" என அப்பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க