வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (26/12/2018)

கடைசி தொடர்பு:15:24 (26/12/2018)

அ.தி.மு.க-வோடு கூட்டணி சேருகிறதா பா.ம.க? - பின்னணி தகவல்கள்

அதிமுக  கூட்டணி ராமதாஸ் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க அல்லது அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுவது குறித்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தி.மு.க, அ.தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கும் சூழலில் பா.ம.க உள்ளது. 

 தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் கூட்டணி முடிவாகி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதில் பா.ம.க. கேட்ட தொகுதிகளைக் கொடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி வலுப்பெறுவதை பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. விரும்பவில்லை. இதனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள்பக்கம் இழுக்க அ.தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் சேராமல் இருக்கும் பா.ம.க.வுக்கு அ.தி.மு.க. தரப்பிலிருந்து தூதுவிடப்பட்டுள்ளது. அப்போது சில வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, 5 தொகுதிகள், ஒரு ராஜசபா எம்.பி. பதவி என சொல்லப்பட்டுள்ளது. அதோடு தேர்தலுக்குத் தேவையான செலவு குறித்தும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், பா.ம.க. தரப்பிலிருந்து எந்தமுடிவும் சொல்லப்படவில்லையாம்.

கூட்டணி எடப்பாடி பழனிசாமி ஓபன்னீர்செல்வம்

இதுகுறித்து அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம். ``நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த வியூகம் அமைத்துவருகிறோம். கூட்டணி குறித்து இறுதிவரை நாங்கள் இறுதி முடிவு எடுக்கவில்லை. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க சிலர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அதற்கு ஒரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் வலுவான கூட்டணியை அமைக்க அ.தி.மு.க. முயற்சி செய்துவருகிறது. 

ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். அதன்படி தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியானதும் மக்கள் விரும்பும் கூட்டணியை அ.தி.மு.க அமைக்கும். ஜெயலலிதா இல்லாமல் இந்தத் தேர்தலை நாங்கள் சந்திக்கிறோம். இதனால் இந்தத் தேர்தலில் எங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தற்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. நெருக்கத்தில் இருப்பதாக தகவல் பரப்பப்படுகிறது. ஆனால், அதில் உண்மையில்லை. பா.ஜ.க-வின் தவறுகளை நாங்கள் சுட்டிக் காட்டிவருகிறோம். மாநில அரசுக்குத் தேவையான உரிமைகளை டெல்லிக்குச் சென்று போராடி பெற்றுவருகிறோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல இந்தத் தேர்தலிலும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் அலைதான் வீசும். இதனால் 40-க்கு 40 தொகுதிகளில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். அதே நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட வாய்ப்புள்ளது" என்றனர். 

 கூட்டணி ஸ்டாலின்

தி.மு.க. மூத்த நிர்வாகிகளிடம் பேசியபோது, ``மத்திய, மாநில அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருந்துவருகின்றனர். இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நல்லதொரு முடிவை எடுப்பார்கள். அது. தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக அமையும். அதன்முன்னோட்டம்தான் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பாதகமாக அமைந்துள்ளது. அதே நிலைதான் தமிழகத்திலும் ஏற்படும். நாடாளுமன்றத் தேர்தலோடு 20 தொகுதிகளின் இடைத்தேர்தலையும் சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது. அதுதொடர்பாக சமீபத்தில் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டோம். அதே நேரத்தில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்பது குறித்த ரகசிய சர்வேயும் எடுக்கப்பட்டுவருகிறது.

தி.மு.க-வில் இணைய உள்ள கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் தொகுதிப் பங்கீடு முடிந்ததும் அறிவிப்பு வெளியிடப்படும். கருணாநிதி இல்லாத பொதுத் தேர்தலை தி.மு.க. சந்திக்கிறது. இதனால் கூடுதல் கவனத்துடன் தேர்தல் பணியாற்ற தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கெற்ப தேர்தல் வியூகங்கள் அமைக்கப்படவுள்ளன" என்றனர். 

 கூட்டணி ராமதாஸ்

பா.ம.க. நிர்வாகிகள் சிலரிடம் கேட்டதற்கு. ``அ.தி.மு.க.வை அதிகளவில் நாங்கள்தான் விமர்சித்துள்ளோம். தேர்தல் தேதி அறிவித்தப்பிறகுதான் கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுக்க முடியும். பேச்சுவார்த்தை நடப்பதை வைத்து எதையும் சொல்ல முடியாது. கூட்டணி, தேர்தல் பணிகள் குறித்து விரைவில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. அதில் நிறுவனர் ராமதாஸ் நல்லதொரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்" என்றனர்.