வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (26/12/2018)

கடைசி தொடர்பு:15:51 (26/12/2018)

எதிர்பாரா நிகழ்வு! - நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட ஸ்டாலின், தினகரன்

தமிழக அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் அரசாணைக்குப் பிறகு, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே  பெரிய அளவிலான ஊதிய முரண்பாடுகள் நிலவிவருகின்றன. இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டி, இம்மாத இறுதியில் போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். 

ஆசிரியர்கள் போராட்டம்

அதன்படி, 2009 மற்றும் டெட் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்புப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த ஆசிரியர்கள், சென்னை டி.பி.ஐ அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டபோது, ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களைக் கைதுசெய்து ராஜரத்தினம் அரங்கத்தில் காவல் துறையினர் அடைத்தனர். பிறகு, நேற்று மாலை அவர்கள் அங்கிருந்து வெளியில் விடப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மீண்டும் டி.பி.ஐ அலுவலக வளாகம் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

ஸ்டாலின்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்குப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று காலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரையடுத்து அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் வந்து தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் போராட்டத்தின்போது ஸ்டாலினும் தினகரனும் எதிர்பாராதவிதமாகச் சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

டிடிவி தினகரன்

முன்னதாக மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழாவின்போது ஸ்டாலினும் தினகரனும் ஹோட்டலில் ரகசியமாகச் சந்தித்ததாகக் கூறப்பட்டது. ‘நான் தங்கியிருந்த ஹோட்டலில்தான் ஸ்டாலினும் தங்கியிருந்தார். அவர் அங்கு வந்தது எனக்குத் தெரியாது. நாங்கள் இருவரும் சந்திக்கவில்லை’ என டி.டி.வி.தினகரன் விளக்கமளித்திருந்தார். ஸ்டாலினும் தினகரனும் சந்தித்துக்கொண்டார்கள் எனப் பல வதந்திகள் வந்த நிலையில் இன்று மக்கள் முன்பாக இவர்கள் சந்தித்துக்கொண்டது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது. இருந்தும் இவர்களின் சந்திப்பை அங்குள்ளவர்கள் பெரிதாக கவனிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.