`ரத்தத்தை பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்துவதில்லை!’ - சாத்தூர் கர்ப்பிணி விவகாரத்தால் வெளிவரும் உண்மைகள் | Sattur Blood Bank Issue Jawahirullah Slams TN Government

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (26/12/2018)

கடைசி தொடர்பு:16:15 (26/12/2018)

`ரத்தத்தை பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்துவதில்லை!’ - சாத்தூர் கர்ப்பிணி விவகாரத்தால் வெளிவரும் உண்மைகள்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அரசின் அலட்சியப்போக்கே இதற்குக் காரணம் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ஜவாஹிருல்லா

அவர் அறிக்கையில்,

``சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு இரு வாரங்களுக்கு முன்பு, சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது. ரத்தம் ஏற்றிய நாளில் இருந்து அவர் சோர்வாகவே காணப்பட்டார். இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையிலும் பிறகு சாத்தூர் அரசு மருத்துவமனையிலும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விருதுநகர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சம்பந்தப்பட்ட ரத்த வங்கி பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பிறகு, ரத்த வங்கி ஊழியர் வளர்மதி தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2 ஒப்பந்த ஊழியர்களும் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்ப்பிணி

கர்ப்பிணிப் பெண்ணின் ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்துள்ளது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணி வேதனையுடன் ``நான் சிறு வயதில் இருந்து ஒரு ஊசி கூட போட்டதில்லை. அரசுதான் எனது இந்த நிலைக்குக் காரணம். இந்த ரத்தத்தைக் கொடுத்து, அரசு என்னைக் கொல்லாமல் கொன்றுவிட்டது. இதற்கு அரசு என்னை உண்மையிலேயே கொன்றிருக்கலாம். என்னை யாரும் ஒதுக்கக் கூடாது. எனக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

மருத்துவ சேவைத் துறையில் எடப்பாடி பழனிசாமி அரசு அலட்சியமாக நடந்து வருகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. எய்ட்ஸுக்காக மத்திய மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகின்றன. இச்சூழலில் தமிழகத்தில் அரசு மருத்துவமனையே கொடிய எய்ட்ஸ் நோயைப் பரப்பும் அவலத்தை மேற்கொண்டுள்ளது வேதனைக்குரியதாகவும் கண்டனத்துக்குரியதாகவும் உள்ளது.

குருதிக் கொடை மூலம் பெறப்படும் ரத்தத்தை மூன்று வகை பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கருதுகிறார்கள். ஆனால், அரசு மருத்துவமனைகளில் மேலோட்டமான பரிசோதனை முறையே கடைப்பிடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுள்ளது. பி.சி.ஆர் (Polymerase Chain Reaction) என்னும் பரிசோதனை எங்கும் நடத்தப்படுவதில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் எய்ட்ஸ்க்கான பிரத்யேக பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் உட்படுத்தப்படாதால் ரத்தத்தில் எச்.ஐ.வி.பாசிடிவ் இருப்பதை தெளிவாகக் கண்டுபிடிக்க முடியாத சூழல் நிலவுவது ஆபத்தானது. 

சாத்தூர் சம்பவத்துக்குப் பிறகாவது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரத்த மாதிரிகளை முழுமையாகச் சோதிக்கும் வசதிகள் செய்யப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த அவல நிலைக்குக் காரணமான மருத்துவ அலுவலர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதுடன் பாதிக்கப்பட்ட பெண்மணியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாகத் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்’ என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.