பெண்களைக் குறிவைத்து கொள்ளை! - சில மணி நேரத்தில் கொள்ளையனைப் பிடித்த நெல்லை போலீஸ் | Nellai Robbers arrested by police and recovered money and cellphones

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (26/12/2018)

கடைசி தொடர்பு:18:04 (26/12/2018)

பெண்களைக் குறிவைத்து கொள்ளை! - சில மணி நேரத்தில் கொள்ளையனைப் பிடித்த நெல்லை போலீஸ்

நெல்லை மாநகர் பகுதியில் தொடர்ந்து வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் கைகளில் உள்ள சிறிய பைகளை மட்டுமே குறிவைத்துக் கொள்ளையடித்த நபரிடம் இருந்து பணம், செல்போன்கள் உள்ளிட்டவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

கொள்ளையன் இசக்கிமுத்து

நெல்லை மாநகரப் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை மட்டுமே குறிவைத்து, இரு சக்கர வாகனத்தில் வரக்கூடிய மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்வதாகத் தகவல்கள் வெளியாகின. ஒரே நாளில் நெல்லை டவுன், பாளையங்கோட்டை இலந்தகுளம் சாலை, டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெண்களிடம் வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்டனர். 

ஒரே நாளில் நடந்த கொள்ளைச் சம்பவங்கள் நெல்லை மாநகரப் பகுதியில் வசிக்கும் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் குற்றப்பிரிவு காவல்துறையினர் கொள்ளையர்களைப் பிடிக்க தீவிரம் காட்டினார்கள். கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சி நடந்தது. அதில் இரு கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வது தெரியவந்தது. 

அதனால் குறிப்பிட்ட சில கம்பெனிகளின் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை மட்டும் காவல்துறையினர் நிறுத்தி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலப்பாளையம் பகுதி வழியாக ஒரு வாகனத்தில் வந்த நபரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த நபர் மேல ஓமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பதும் வீரமணிகண்டன் என்பவருடன் சேர்ந்து வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

வீரமணிகண்டன் என்பவர் ஏற்கெனவே பைக்குகளைத் திருடியதற்காகக் கைதாகி சிறைக்குச் சென்றவர். அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது. இருவரும் சேர்ந்து தனியாகச் செல்லும் பெண்கள் கைகளில் வைத்திருக்கும் பைகளை மட்டுமே கொள்ளையடிப்பதாகவும் சில பெண்களிடம் கையில் வைத்திருக்கும் செல்போன்களைப் பிடுங்கிச் சென்றுள்ளதாகவும் பிடிபட்ட இசக்கிமுத்து வாக்குமூலம் அளித்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். 

இசக்கிமுத்துவின் கூட்டாளியான வீரமணிகண்டன் தலைமறைவாக இருப்பதால் அவரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட இசக்கிமுத்துவிடமிருந்து ரொக்கப்பணம், செல்போன்கள், பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். குற்றச்செயல் நடைபெற்ற 10 மணி நேரத்திலேயே குற்றவாளியைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்த மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு எஸ்.ஐ-களான நாகராஜன், பழனிமுருகன், விஜய கோல்டன் ஆகியோரை மாநகர துணை ஆணையர் ஃபெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.