கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்! - மனித உரிமை ஆணையம் விசாரணை | human rights commission has investigate the sattur pregnant woman incident

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (26/12/2018)

கடைசி தொடர்பு:17:00 (26/12/2018)

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்! - மனித உரிமை ஆணையம் விசாரணை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் என நீதிபதி துரைஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் என நீதிபதி துரைஜெயச்சந்திரன் தெரிவித்தார். 

மனித உரிமை ஆணைய நீதிபதி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் உரிமைகள் மீறப்படுவதாக மனித உரிமை ஆணையத்துக்குத் தகவல்கள் சென்றன. அதனால் மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதியான துரைஜெயச்சந்திரன் இன்று பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். சிறைவாசிகள், சிறைக் காவலர்கள் என அனைத்து தரப்பினரிடமும் அவர் விசாரணை மேற்கொண்டார். அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி துரைஜெயச்சந்திரன், ``பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகள் ஜாதி ரீதியாகப் பிரிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதாக வந்தப் புகாரை அடுத்து ஆய்வுக்காக வந்தேன். சிறை அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவே இதுபோன்று பிரித்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார். நிலைமையை சுமுகமாக மாற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், விரைவில் இந்த முறையில் மாற்றம் ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

நீதிபதி துரைஜெயச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் குறித்து தமிழக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கும். இந்த விவகாரம் குறித்து ஊடகங்கள் மூலமாக தெரியவந்ததால் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எங்களிடம் நேரடியாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் இந்தச் சம்பவம் குறித்து மருத்துவப் பிரதிநிதிகளிடமிருந்து அறிக்கை பெற்று விசாரணை நடத்துவோம். இதில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் கிடைக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளும்’’ எனத் தெரிவித்தார்.