‘குடியாத்தத்தில் காட்டு யானைகளால் பயிர்கள் சேதம்’ - விவசாயிகள் வேதனை | Group of Elephants Camped in Gudiyatham

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (26/12/2018)

கடைசி தொடர்பு:20:20 (26/12/2018)

‘குடியாத்தத்தில் காட்டு யானைகளால் பயிர்கள் சேதம்’ - விவசாயிகள் வேதனை

குடியாத்தத்தில் 11 காட்டு யானைகள் கூட்டமாகக் களமிறங்கி மாந்தோப்பு, வாழைத் தோப்பு மற்றும் பயிர்களைத் தொடர்ந்து நாசப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விவசாய நிலங்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி உட்பட்ட கிராமங்களுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. கொட்டமிட்டா கிராமத்துக்குள் 11 காட்டு யானைகள் புகுந்துள்ளன. அங்கு பாபு, உஸ்மான், காசி மற்றும் தனகொண்டபல்லியில் குத்தூஸ் ஆகியோருக்குச் சொந்தமான மாந்தோப்பு மற்றும் வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் ஆக்ரோஷமாகப் பிளிறி அட்டகாசம் செய்தன.

இதைத்தொடர்ந்து, அதே பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் இன்று அதிகாலை விவசாயி பாபுவின் மாந்தோப்புக்குள் மீண்டும் புகுந்தன. அங்கிருந்த மாமரங்களை முட்டி மோதி தும்பிக்கையால் பிடுங்கி வீசின. மாமரக்கிளைகளை உடைத்தெறிந்தன. இதேபோல் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரங்களைத் துவம்சம் செய்தன. கூட்டமாகக் களமிறங்கியுள்ள யானைகளை விரட்ட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

காட்டு யானைகள்


‘‘யானைகளை விரட்டும் நடவடிக்கையில் வனத்துறையினர் அலட்சியமாகச் செயல்படுவதாகப் புகார் தெரிவித்த விவசாயிகள், நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி நீதிமன்றத்தை நாட உள்ளதாக’’ தெரிவித்தனர்.