`30 ரூபாய் டெஸ்டுக்கு 50,000 ரூபாய் பில்..!’ - அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த அப்போலோ | Sugar test is expensive in apollo, says minister

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (26/12/2018)

கடைசி தொடர்பு:18:02 (26/12/2018)

`30 ரூபாய் டெஸ்டுக்கு 50,000 ரூபாய் பில்..!’ - அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த அப்போலோ

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தேசிய சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். `சர்க்கரை நோய் இருக்கானு செக் பண்ண அப்போலோ போனா ரூ.50,000 செலவு ஆகுது' என அமைச்சரின் ஓப்பன் டாக் சித்த மருத்துவத்துக்கு உற்சாக டானிக்காக அமைந்திருந்தது.

சித்த மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன், ``சித்தமருத்துவம் காலபோக்கில் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. ஆங்கில மருத்துவத்தைவிட சித்த மருத்தும் மிகவும் சிறப்பானது. ஆங்கில மருத்துவத்தை ஒரு நோய்க்காகப் பயன்படுத்தினால் பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், சித்த மருத்துவம் அப்படியில்லை. ஒரு குறிப்பிட்ட நோய்க்காக சித்த மருந்து சாப்பிட்டால் அடுத்ததாக அந்த நோய் திரும்பவும் வராது. அதுதான் இந்த மருத்துவத்தில் இருக்கும் சிறப்பு அம்சமாகும். சித்த மருந்து ஏழை எளிய மக்களின் மருந்தாகும்.

நமக்கெல்லாம் அருமையான மருந்து சித்தாவில் இருக்கிறது. செலவும் குறைவாக இருக்கும். சமீபத்தில் நான் சென்னை அப்போலோவுக்கு சர்க்கரை நோய் அளவு பரிசோதனை செய்வதற்காக சென்றிருந்தேன். ஒரு நாள் முழுவதும் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்னு பாடாய்ப்படுத்திவிட்டார்கள் டாக்டர்கள். 30 ரூபாயில் எடுக்க வேண்டிய டெஸ்ட்க்கு ரூ.50,000 வரைக்கும் எனக்கு பில் கொடுத்தார்கள். மாத்திரை கொடுங்கனு கேட்டேன். உங்க வீட்டுக்கே மாத்திரை வந்திரும்னு சொன்னாங்க. வீட்டுக்கு வந்து பார்த்தால் மாத்திரையோடு சேர்த்து பில் ரூ. 50,000 வந்திருந்தது. மாத்திரை வேண்டாம்னு சொன்னால் மந்திரி திருப்பி அனுப்பிட்டாருனு சொல்லுவாங்க. அதுக்காகவே பணத்தைக் கொடுத்தேன். அப்படிப்பட்ட மருத்துவம்தான் அலோபதி. ஏழைகளுக்கு சித்த மருத்துவம்தான் சரியானது” என்று அமைச்சர் பேசி முடித்தபோது, இந்த முகாமுக்கு வந்திருந்த சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் முகம் சுளித்துப்போனார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் செல்போனில் காப்பி செய்து வந்திருந்தார்கள். செல்போன் சரியாக வேலை செய்யாததால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அறைகுறையாகவே முடிந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க